
மஇகாவின் 80 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் 152 தொகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என கட்சியின் உதவி தலைவர் டத்தோ முருகையா கூறினார்.
இந்த 80 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இது வரை கட்சி 8 நிகழ்வுகளை நடத்தி வருவதாக நேற்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இவற்றில் கூட்டு பிரார்த்தனை, குடும்ப தின விழா, தேசிய நிலையில் விளையாட்டு போட்டிகள் வெறற்றிகரமாக நடத்தப்பட்டு விட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நிகழ்வுகளை வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் தாம் நன்றி கூறுவதாக அவர் சொன்னார்.
அடுத்த கட்டமாக மருத்துவ முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய நிலையில் தொடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த மருத்துவ முகாம் தொடர்பாக தாம், டாக்டர் நவா சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளருடன் சந்திப்பு நடத்தி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சு அனைத்து தொகுதிகளிலும் தனது மருத்துவ குழுவினரை அனுப்பி இந்த மருத்துவ முகாமை வெற்றியடைய செய்ய உறுதியளித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
வரும் ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை இந்த மருத்துவ முகாம் நடைபெறும்.
பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள முடியும் என்றார் அவர்.
இதனிடையே வரும் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பேச்சுப் போட்டியை ஒத்திவைக்க கட்சி முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் இந்த மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரனுடன் கலந்து பேசி இணக்கம் காணப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த பேச்சு போட்டி வரும் ஆகஸ்டு மாதம் மத்தியில் நடைபெறும் என்றார் அவர்.
இதனிடையே வரும் ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல்களை எதிர் கொள்ள மஇகா தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் மஇகா போட்டியிடும் என அவர் சுட்டிக் காட்டினார்.
ஜொகூர் தேர்தலில் பெர்லிங்கில் டத்தோ அசோஜன்,கெமெலாவில் வேள்பாரி, காஹாங்கில் டத்தோ நெல்சன் மற்றும் புக்கிட் பாத்துவில் தாமும் தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமையேற்கவிருப்பதாக அவர் சொன்னார்.


