
சென்னை ஆக 10
மூன்றாவது சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற சென்னை செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு – 2026-ன் இரண்டாம் நாள் நிகழ்வுகள், சென்னை விஐடி தொழில்நுட்பப் பல்கலைக்கழகவளாகத்தில் சிறப்பாக நடைபெற்றன.
மலேசியாவின் பெனாங் மாநில துணை முதலமைச்சர் மாண்புமிகு ஜக்தீப் சிங் தியோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். தமிழ்நாடு மற்றும் பெனாங் இடையேயான கல்வி, தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுச் சேவைகள் துறை அமைச்சர் திரு. ஆர். குமார் அவர்களை பெனாங் மாநிலத்திற்கு வருகை தருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
மாணவர்களிடம் உரையாற்றிய அமைச்சர் திரு. ஆர். குமார், செயற்கை நுண்ணறிவை தொடர்ந்து கற்றுக்கொண்டு தங்களது அறிவையும் திறமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். “கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது கடலளவு”என்ற கருத்தை எடுத்துரைத்த அவர், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துபவர்களாக மட்டுமல்லாமல், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குபவர்களாகவும் மாணவர்கள் உருவாக வேண்டும் என்றார்.
தமிழ்நாடு அரசு செயற்கை நுண்ணறிவை நிர்வாகம், பொதுமக்கள் சேவை, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விஐடி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஜி. விஸ்வநாதன் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் ஜி.வி. செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினர்களைக் கௌரவித்தனர்.

உலகத் தமிழ் வர்த்தகச் சங்கத்தின் தலைவர் திரு. ஜெ. செல்வகுமார், அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. பி. குமரேசன், மற்றும் விஐடி பல்கலைக்கழகத்தின் கூடுதல் பதிவாளர் திரு. பி.கே. மனோகரன் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த ஏர்செல் நிறுவனத்தின் நிறுவனர் திரு. சி. சிவசங்கரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்த இரண்டு நாள் நிகழ்வுகளில் உலக நாடுகளைச் சேர்ந்த திரு. சுரேஷ் ஜானகிராமன் – மூத்த இயக்குநர் மற்றும் மேகக் கணினியியல், இணையப் பாதுகாப்புத் துறைத் தலைவர், டாக்டர் சேஜூன் லீ – பேராசிரியர், அமைப்பு குறைக்கடத்திப் பிரிவு, டோங்குக் பல்கலைக்கழகம், தென் கொரியா
டாக்டர் யங்மின் லீ – பேராசிரியர், இயற்பியல் மற்றும் குறைக்கடத்தி அறிவியல் பிரிவு, டோங்குக் பல்கலைக்கழகம், தென் கொரியா, குவாண்டம்-செயல்பாட்டு குறைக்கடத்தி ஆராய்ச்சி மையம், டோங்குக் பல்கலைக்கழகம், தென் கொரியா
டாக்டர் சாந்தனு – மூத்த முதன்மை ஒப்புமை ஒருங்கிணைந்த மின்சுற்று வடிவமைப்புப் பொறியாளர், ஆல்ஃபாகோர் நிறுவனம், அமெரிக்கா, டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியன் – சட்ட ஆலோசகர், சமரச நிபுணர், கல்வியாளர் மற்றும் பேச்சாளர், ஆஸ்திரேலியா எனபல்வேறு தொழில்நுட்ப நிபுணர்களும்
இந்தியாவின் திரு. சதீஷ் பைரவான், உலகளாவிய தரவு மற்றும் பகுப்பாய்வுத் தலைவர், டாடா ஆலோசனைச் சேவைகள் நிறுவனம், ஜப்பான் நாட்டின் கேப் ஜெமினியின் தலைவர், திரு. சுரேஷ் ஜானகிராமன் – கேப்ஜெமினி , திரு. ஹரிஷ்வர் – மூத்த கட்டமைப்பு வல்லுநர், ரகுட்டன், டாக்டர் அனுபமா ரே, தொழில்நுட்பத் தலைவர், குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு; மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி, ஐ.பி.எம். திருமதி காஞ்சன் கேத்கர் – மனிதவளத் தலைவர், எச்.சி.எல். நிறுவனத்தின் அதிகாரிகளும் பங்கு பெற்றனர்.
இந்நிகழ்ச்சியை திரு. ஜான் தன்ராஜ் மற்றும் விஐடி தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியை திருமதி மோனிகா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.



