
கிள்ளான், ஆக 10
கல்வியே எதிர்காலத்திற்கான மிகச் சிறந்த முதலீடு என்பதைக் கருத்தில் கொண்டு, மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) 2026ஆம் ஆண்டுக்கான ‘செலிக் மடானி’ தொடக்கக் கல்வி மானியத் திட்டத்தின் மூலம் இந்தியச் சமூகத்தின் சிறுவர்களுக்கான தொடக்கக் கல்வியை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், பி40 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பரவலான தொடக்கக் கல்வி வாய்ப்புகளையும் தரமான கற்றல் சூழலையும் பெறுவதை உறுதிசெய்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அறிவு கூர்மையும், போட்டித்திறனும், தன்னம்பிக்கையும் கொண்ட தலைமுறையை உருவாக்க இலக்கு கொள்ளப்பட்டுள்ளது.
மலேசிய இந்தியச் சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு சிறார்களின் திறன்களையும் ஆற்றலையும் சிறு வயது முதலே வளர்த்தெடுப்பது மிக முக்கியம் என்பதில் மடானி அரசாங்கம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாக மித்ராவின் தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயர் தெரிவித்தார்.

“அரசாங்கம் ஒதுக்கும் ஒவ்வொரு நிதியும் இடைத்தரகர்களின்றி, நேரடியாக உண்மையான பயனாளிகளைச் சென்றடைய வேண்டும் என்பதில் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறார்.
அதற்கேற்ப, ‘செலிக் மடானி’ திட்டத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் துல்லியமாகக் கண்காணிக்கப்பட்டு, சமூகத்திற்கு நேரடியாக நன்மை பயக்கும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன,” என்று நேற்று சிலாங்கூரில் உள்ள மூன்று பாலர்பள்ளிகளுக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பணிப்பார்வையின்போது அவர் கூறினார்.
2026ஆம் ஆண்டிற்காக, நாடு முழுவதும் 162 பாலர்பள்ளிகளில் பயிலும் 3,612 இந்தியச் சிறார்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மித்ரா மொத்தம் RM8,874,259.60 நிதியை ஒதுக்கியுள்ளது.
இத்திட்டத்தின் நன்மைகள் மூலம், ஒவ்வொரு மாணவரும் கல்வி மானியம் மற்றும் காலை உணவு உதவித்தொகை உட்பட ஆண்டுக்கு மொத்தம் RM2,530 வரை நிதியுதவியைப் பெறுவர். இது B40 குடும்பங்களின் நிதிச் சுமையைப் பெரிதும் குறைக்கிறது.
தொடர்ந்து பேசிய கே. ரவீந்திரன் நாயர், தொடக்கக் கல்வி மட்டுமன்றி, திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் வளர்ச்சி, சமூக நலன், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஒருமைப்பாடு ஆகிய முதன்மைத் துறைகளிலும் வளமான எதிர்கால தலைமுறையை உருவாக்கும் நோக்கில் மித்ரா தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் எனத் தெரிவித்தார்.


