
குருகிராம்(ஹரியானா) டிச 10
டாட்டா குழும நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா 100 புதிய ஏர்பஸ் விமானங்களை கொள்முதல் செய்ய தனது விரிவாக்கத் திட்டத்தை உறுதிப்படுத்தியது.
இந்த விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா 90 ஏர்பஸ் A320neo மற்றும் 10 A350 விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு போயிங் மற்றும் ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனங்களிடம் ஏர் இந்தியா 470 புதிய விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த விமானங்கள் கொள்முதல் அதிகரிப்பிற்கு விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பே காரணம் என டாட்டா சன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் கூறினார்.
மேலும் உலக அளவில் இளைய விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே தங்களின் இந்த விஸ்தரிப்புக்கு காரணம் என்றார் அவர்.
இந்த புதிய கொள்முதல் திட்டத்தால், ஏர் இந்தியாவின் வளர்ச்சி மேலும் வலுவடையும் என அவர் சுட்டிக் காட்டினார். இதனிடையே இந்திய வான் போக்கு துறையில் ஏர் இந்தியா வெற்றிகரமாக கால் பதித்து வருவதாக ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி குய்லூம் ஃபௌரி கூறினார்.
அதேவேளையில் A350 விமானங்கள் டெல்லி மற்றும் முக்கிய அனைத்துலக நகரங்களான லண்டன் மற்றும் நியுயார்க் ஆகிய நகரங்களுக்கு இடைநில்லா விமான சேவைகளை வழங்கி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அனைத்துலக விமான பயணிகளுக்கு வசதியான மற்றும் சௌகரியமான பயண சேவைகளை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே அனைத்துலக விமான பயணிகள் ஏர் இந்தியாவில் பயணம் செய்வதை விரும்பி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.


