
புத்ரா ஜெயா:
இனம், சமூகப் பின்னணி அல்லது மாநில வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் சிறந்து விளங்கும் அனைத்து மலேசிய மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் கல்வி கற்க சமமான வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சரும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பை வரவேற்ற அவர், கல்வியே நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் அடித்தளம் என்றும், இன உணர்வுகளின் அடிப்படையில் அல்லாமல் அறிவு, திறமை, ஒழுக்கம் மற்றும் சமமான வாய்ப்புகளின் அடிப்படையில் நாட்டின் எதிர்காலம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் யுனேஸ்வரன் கோடி காட்டினார்.
மெட்ரிகுலேஷன் கல்வி மாணவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக அல்லாமல், அறிவாற்றல் மிக்க தொழில்முறை நிபுணர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், கணக்காளர்கள், கல்வியாளர்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் முக்கியப் பாலமாகக் கருதப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2025-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வில் 3,350 தேர்வு மையங்களில் மொத்தம் 4,13,299 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.
அவர்களில், 10ஏ’க்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட ஏ’க்களைப் பெற்ற 6,717 மாணவர்கள் மெட்ரிகுலேஷன் கல்விக்கு விண்ணப்பித்திருந்தால், 2026/2027 கல்வியாண்டிற்கான இடம், இனம் மற்றும் சமூகப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அணுகுமுறை, மடானி அரசாங்கம் எந்தத் தரப்பினரையும் புறக்கணிக்காமல், திறமையான அனைத்து மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறது என்பதை நிரூபிப்பதாகவும் அவர் கூறினார்.
அதேவேளையில், மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பை இழந்ததாக சில மாணவர்கள் முன்வைக்கும் குறைகளும் விரைவாகக் கவனிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கல்வியை இன அரசியலுடன் இணைக்கக் கூடாது என்றும் எந்த இனத்தைச் சேர்ந்த மாணவராக இருந்தாலும், கல்வியில் சிறந்து விளங்கினால் அவர்களின் உயர்கல்விப் பயணத்திற்கு அரசு வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மலேசியா மடானியின் நோக்கத்திற்கு ஏற்ப போட்டித்திறன் மிக்க, அனைவரையும் உள்ளடக்கிய, மனிதநேய மதிப்புகளைக் கொண்ட நாட்டை உருவாக்குவதற்கு கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும், தகுதியின் அடிப்படையிலான முறையை வலுப்படுத்துவதும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை ஆதரிப்பதும் அவசியம் என்றும் யுனேஸ்வரன் கூறினார்.
மேலும், கல்வியைப் பிளவுபடுத்தும் கருவியாக அல்லாமல், தேசிய ஒருமைப்பாடு, முன்னேற்றம் மற்றும் நாட்டைக் கட்டியெழுப்பும் பாலமாக அனைவரும் அணுக வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.


