
கேரளாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்த நிலையில், முதல்வர் பதவியை யார் ஏற்க வேண்டும் என்ற இழுபறி நீண்டது. இறுதியில் 25 ஆண்டுகள் சட்டமன்ற அனுபவம் கொண்ட, எதிர்க்கட்சித் தலைவராக இடதுசாரிகளுக்கு எதிராக களத்தை மாற்றிய விடி சதீசன், தேசிய தலைமையால் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. குறிப்பாக, காங்கிரஸ் 63 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 22 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன்மூலம், இடது பினராயி விஜயன் தலைமையிலான ஜனநாயக முன்னணி கூட்டணியின் பத்தாண்டுக்கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், கேரளத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கட்டிலை பிடித்த காங்கிரஸில், முதல்வர் யார் என்ற குழப்பம் தொடர்ந்து வந்தது. எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முதலிய 3 பேருக்கு இடையே முதல்வர் பதவிக்கான போட்டி நீடித்தது.


