
வெற்றி தினக் கொண்டாட்டத்தின் காரணமாக, கடந்த 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ரஷ்யா – உக்ரைன் இடையே மூன்று நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே ரஷ்யா தன் ஆட்டத்தை ஆரம்பித்தது. ஆம், போர் நிறுத்தத்திற்குப் பிறகு ரஷ்யா ஒரே இரவில் உக்ரைன் மீது 200-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ஏவியதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், நான்கு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப்படையை தோற்கடித்து அப்போதைய சோவியத் யூனியன் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மே 9ஆம் தேதி வெற்றி தினமாக ரஷ்யாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போதைய சோவியத் யூனியனில் ரஷ்யாவும், உக்ரைனும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


