Thursday, April 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பரதநாட்டிய நடனக்கலையின் மரபு நாட்டில் நிலைநிறுத்த வேண்டும் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஶ்ரீ சுகுந்தன் சூளுரை

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றப்பட்ட மரபு கொண்ட நடனக் கலையான பரதநாட்டியத்தின் சலங்கை பூஜை மிக விமரிசையாக தலைநகரில் அமைந்துள்ள பிரிக்ஃபீல்ட்ஸ் கலாமண்டபத்தில் சமீபத்தில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் தோன்றிய பாரம்பரியம் கொண்ட நடனக்கலையான பரதநாட்டியத்தின் சலங்கைப் பூஜையின் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்ட, மஜ்லிஸ் கெபுடாயாயான் டான் வாரிசான் நூசந்தாராவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் தவதிரு ஶ்ரீ சுகுந்தன், தலைமையேற்று, அதிகாரப்பூர்வமாக நிகழ்ச்சியினைத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வை மிகச் சிறப்பாக வடிவமைத்து, பரதக்கலையின் பொற்காலப் பாரம்பரியத்தை, 22 ஆண்டுகளாக உயிர் கொண்ட கலையாக நிலைநிறுத்தினார், இந்திராணி ‘டான்ஸ் அகாடெமி’யின் இயக்குனரும் நடன ஆசிரியருமான டாக்டர் இந்திராணி சுகுமார் அவர்கள்.
தெய்வீக முறையில் 18-வது முறையாக தமது நடன சாலையின் சலங்கை பூஜையை வெற்றிகரமாக பூர்த்தி செய்தார் என்று கூறினால் அது மிகையாகாது என டத்தோ ஶ்ரீ டாக்டர் தவதிரு ஶ்ரீ சுகுந்தன் அவர்கள், தமது அதிகாரப்பூர்வ உரையில் புகழாரம் சூடினார்.
மேலும், பல்வேறு கலாச்சார தலைவர்கள், நடனக்கலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு மாணவிகளை ஊக்குவிக்கும்படி அரங்கத்தை அலங்கரித்தனர்.


சலங்கை பூஜை என்பது பாரம்பரிய இந்திய நாட்டியக் கலை உலகில், குறிப்பாக பரதநாட்டியத்தில், ஒரு புனிதமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. இது ஒரு மாணவி முதன்முறையாக தன் கால்களில் சலங்கை அணிந்து, மக்களின் முன்னிலையில் நடனம் செய்யத் தயாராக இருப்பதைச் சின்னமாகக் குறிக்கிறது. அதைவிட முக்கியமாக, இது ஒரு சாதனை நிகழ்வாகும். குருவை, கலை வடிவத்தை மற்றும் அதன் ஆதாரமான ஆன்மிக மரபுகளை மரியாதைப்படுத்தும் ஒரு நிகழ்வாகும். இது பல ஆண்டுகளாக நீண்ட பயிற்சி, கற்றல், தியாகம் மற்றும் தொடர் முயற்சிகளுக்குப் பிறகு வந்த ஒரு முக்கியமான தருணம் என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் தவதிரு ஶ்ரீ சுகுந்தன் அவர்கள் தமது உரையில் விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் பத்து மாணவிகளுக்குப் பரதநாட்டியத்தின் சலங்கை பூஜை சம்பிரதாயம் நடத்தப்பட்டு, சலங்கை அணிவித்தார் குரு ஶ்ரீமதி டாக்டர் இந்திராணி. புதிய சலங்கையைக் காலில் அணிந்த நடனமணிகள், மேடையில் சதுர வேதங்களும், தேவார பாடல்களும், ஆலய நடனம், தில்லானா மற்றும் மங்கள இசை பாங்கில் சிறந்த நடனங்களை வழங்கினர். இம்மாணவர்கள் மத்தியில் 41 வயதைக் கடந்த பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் குமாரி அருணா தேவி கிருஷ்ணன் மற்றும் திருமணமாகி 45 வயதைக் கடந்த திருமதி யோக செல்வி பாஸ்கரன் அவர்களும், இவ்வயதில் சலங்கை பூஜையைப் பூர்த்திகரமாக நிறைவேற்றியது பாராட்டக்கூடியது என டத்தோ ஶ்ரீ டாக்டர் தவதிரு ஶ்ரீ சுகுந்தன் பெருமையாகக் கூறினார்.
தமது குருவால் கற்பிக்கப்பட்ட நடனக்கலையை, அரங்கத்தில் அமைந்துள்ள மேடையில் தங்கள் தனித்திறமையுடன் வழங்கி சமர்ப்பித்த நடனமணிகள், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து, மகிழ வைத்தார்கள்.
இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கும் முன்பு, பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிமுகப்படுத்திய மலேசியா மடானி கோட்பாடான- மதிப்பு, பண்பாடு, ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றில் அடிப்படையாயுள்ள ஒரு பரிவு மிக்க சமுதாயத்தை உருவாக்கக் கூடிய ஒரு நிகழ்வாக இது அமையும் என அவர் நினைவுறுத்தினார்.
சமூகங்களை ஒன்றிணைத்து, பாரம்பரியத்தைக் காப்பதும் மற்றும் வளர்ப்பதுமான, பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய நடனங்கள் மூலம் மலேசியர்கள் பல்துறை பண்பாட்டைக் கொண்டாடி, கலை வெளிப்பாட்டைப் பராமரித்து, தேசிய அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும் என டத்தோ ஶ்ரீ டாக்டர் தவதிரு ஶ்ரீ சுகுந்தன் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்திராணி ‘டான்ஸ் அகாடமி’யின் நிறுவனரும் நடன ஆசிரியருமான, குரு ஶ்ரீமதி இந்திராணி, பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நம் பரதக்கலை பண்பாட்டுப் பயணத்தை நடத்திக் கொண்டிருப்பது பெருமைக்குரிய செயல் என கருதக் கூடியதோடு, நடனக்கலை மாணவர்கள் தமிழ் மரபைக் காத்து வரும் புதிய தலைமுறை மட்டும் அல்லாமல், இந்த விழா அவர்கள் சிரத்தைக்கும் அர்ப்பணிப்பிற்கும் ஓர் அங்கீகாரம்” என்று அவர் கூறினார்.
மலேசியாவின் சுற்றுலா மற்றும் கலாச்சார துறைக்கு இது போன்ற பரதநாட்டிய நிகழ்ச்சி ஒரு பெரும் செல்வம் ஆகும். குரு ஶ்ரீமதி டாக்டர் இந்திராணி அவர்களின் முயற்சியைப் பாராட்டி, கலைகளை மதித்து, கலைஞர்களுக்கு ஊக்கமளித்ததோடு, அனைத்து நடனமணிகளுக்கும், பொன்னாடைகளை அணிவித்து, மலர்ச்செண்டுகளை வழங்கி, தமது பாராட்டை டத்தோ ஶ்ரீ டாக்டர் தவதிரு ஶ்ரீ சுகுந்தன் தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular