
பெட்டாலிங் ஜெயா நவ 30
இந்நாட்டிலுள்ள இந்து ஆலயங்கள் வழிபாட்டு தலங்களாக மட்டுமின்றி சேவை மையங்களாகவும் விளங்க வேண்டும் என தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்.
இந்நாட்டில் சமூக ஒற்றுமையை வலுப்படுத்த இந்து ஆலயங்கள் முக்கிய பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு தேசிய ஒற்றுமை துறை அமைச்சு மற்றும் மலேசிய இந்து சங்கத்துடன் ஏற்பாடு செய்த சமூக மையமாக இந்திய வழிபாட்டுத்தலங்கள் மீதான மாநாட்டை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
ஆலயங்களில் தேவாரம், பரதநாட்டியம் மற்றும் சமய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதே வேளையில் கோயில் நிர்வாகங்கள் அந்த வட்டாரத்தில் உள்ள சமூகத்திற்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்து வருகின்றன. பிள்ளைகளுக்கான அடிப்படை கல்வி வசதி, சுகாதாரம், உணவு, துணிமணிகள் போன்ற வசதிகளையும் செய்து தருகின்றன.
மலேசி இந்து சங்கம் மற்றும் ஆலய நிர்வாகங்கள் இதுபோன்ற அடிப்படை சேவைகளை தொடர்ந்து வழங்கி வர வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
நம்மிடையே வசதிகள் இல்லாவிட்டாலும், நமது இந்திய சமூகத்தினர் ஆலயங்களுக்கு செல்வதை தவிர்த்தது கிடையாது.

ஆலயங்கள் புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் ஒரு தலமாகவும் விளங்கி வருகிறது.
இந்து ஆலயங்கள் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் முக்கிய பங்காற்றி வருகிறது.
ஆகையால் இதுபோன்ற நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள ஆலயங்களுக்கு செல்வதை ஒரு முக்கிய கடமையாக நாம் கருத வேண்டும் என்றார் அவர்.
நாட்டின் நிலைத்தன்மைக்கு தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் மிகவும் அவசியம் என அவர் சொன்னார்.
இதனிடையே இந்த மாநாட்டை நடத்த தமது தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் ஆகோ டாகாங் முழுமையான ஆதரவை வழங்கியதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த மாநாட்டை வெற்றிகரமாக வழிநடத்த ஆதரவு வழங்கிய கோவில் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த மாநாட்டில் பேராசிரியர் முனைவர் டத்தோ என்.எஸ் ராஜேந்திரன், கணேஷ் பாபு ராவ், எஸ். விநாயகமூர்த்தி, டாக்டர் பாலதர்மலிங்கம் மற்றும் ராஜூ குப்பன் ஆகியோரும் உரையாற்றினார்.


