
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் நிலவி வரும் உட்பூசலை கையாள, பெர்சாத்து தலைமைத்துவத்தின் விவேகத்திற்கே விட்டு விடுவோம் என பெர்சாத்து கட்சியின் பெர்செக்குத்து பிரிவின் தலைவர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கூறினார்.
ஆகையால் இந்த விவகாரத்தில் கட்சியின் உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
பெர்சாத்து கட்சியின் ராட்ஷி ஜிடின் மற்றும் அஸ்மின் அலி இரு தலைவர்களை பெரிக்காத்தான் நேஷனல் பதவிகளிலிருந்து அந்தக் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ சாம்சுரி மொக்தார் நீக்கம் செய்தது, பல கேள்விகளை எழுப்பி உள்ளதாக பெர்சாத்து கட்சியின் உச்ச மன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
இந்த முடிவு செல்லுபடியாகுமா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
ராட்ஷி பெர்சாத்துவின் இடைக்கால துணைத் தலைவராகவும் மற்றும் அஸ்மின் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகவும் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போதைய நிலையை கட்சியின் தலைமைத்துவம் கையாள கட்சி உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
பெரிக்காத்தான் நேஷனல் தலைமை தேர்தல் இயக்குனர் பதவியிலிருந்து ராட்ஷி மற்றும் இக்கூட்டயின் துணைத் தலைமை செயலாளர் பதவியிலிருந்து அஸ்மின் நீக்கப்படுவதாக நேற்று முன் தினம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சாம்சுரி அறிவித்தார்.
இதனிடையே இந்த முடிவு குறித்து பெர்சாத்துவுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என சஞ்சீவன் தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனலின் இந்த நடவடிக்கை அரசியல் முதிர்ச்சியான செயல் அல்ல என்றார் அவர்.
இந்த விவகாரத்தில் பாஸ் தலைவர் ஹாடி அவாங் ஒரு மூத்த தலைவர் என்ற நிலைப்பாட்டை தவறிவிட்டார் என அவர் சொன்னார்.


