
ஒரு தரப்பின் முடிவை வைத்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து பெர்சாத்துவை நீக்க முடியாது என பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெளிவுபடுத்தினார்.
இந்த நிலையில் அந்தக் கூட்டணியில் பெர்சாத்து கட்சி நிலைத்திருக்கும் என பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் துணைத் தலைவருமான அவர் சொன்னார்.
மேலும் எதிர்வரும் ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல்களில் பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தை தான் பெர்சாத்து பயன்படுத்தும் என முன்னாள் பிரதமருமான அவர் தெளிவுபடுத்தினார்.
பெரிக்காத்தான் நேஷனல் விதிமுறைகளை அந்தக் கூட்டணி அனைத்து பங்காளி கட்சிகளும் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பெர்சாத்துவை அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேற சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
அந்தக் கூட்டணியை அமைப்பதில் பெர்சாத்து முக்கிய பங்காற்றி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெர்சாத்துவுடன் அரசியல் ஒத்துழைப்பை பாஸ் முறித்துக் கொண்டதாக கட்சியின் தலைவர் ஹாடி அவாங் அண்மையில் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த கூட்டணியில் அரசியல் குழப்பம் நீடி வருகிறது.


