Wednesday, May 13, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஏப்ரல் வரை 398 மத, இன, அரச குடும்பம் தொடர்பான உள்ளடக்கங்கள் நீக்கம்!

இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 3R எனப்படும் மதம், அரச குடும்பம் மற்றும் இன உணர்வுகளைத் தூண்டும் வகையிலான 398 இணைய உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாதம் வரை பெறப்பட்ட 750 புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

இதற்கிடையில், 2022 தொடங்கி கடந்த மாதம் வரை மொத்தம் 8,540 3R தொடர்பான உணர்வுப்பூர்வ உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“2022-ஆம் ஆண்டில் 175 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டன. பின்னர் 2023-இல் அந்த எண்ணிக்கை 1,633 ஆக உயர்ந்தது. 2024-ஆம் ஆண்டில் 4,830 ஆக அதிகரித்த நிலையில், கடந்த ஆண்டு அது 1,504 ஆக குறைந்தது.

“இந்த ஆண்டில் மட்டும் 750 உள்ளடக்கங்களை நீக்கக் கோரி இணைய தள உரிமையாளர்களிடம் அனுப்பப்பட்டன. அதில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 398 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளன,” என்றார்.

ஜொகூர், செனாய் தேசிய இடைநிலைப் பள்ளியில் நடைபெற்ற டிக்டாக் ஷாப் படைப்பாளருக்கான கல்விப் பயிற்சியில் பங்கேற்ற பின்னர் அவர் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், மத, இன மற்றும் அரச குடும்பம் தொடர்பான பெரும்பாலான புகார்கள் காவல்துறையினரால் விசாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இதில் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு பின்னால் இருக்கும் நபர்களை அடையாளம் காண காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.”

“1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம், பிரிவு 233-இன் கீழ் வழக்குகள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுமா என்பது சட்டத்துறை தலைமை அதிகாரியின் பரிசீலனைக்கு உட்பட்டது” என கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular