
சியோல் ஆக 16
கொரிய தமிழ் சங்கத்தின் ‘கலை இலக்கியத் திருவிழா மற்றும் கொரிய தமிழ் சங்க விருதுகள்’ வெகு சிறப்பாக நடைபெற இருப்பதாக கொரிய தமிழ் சங்கத்தின் தலைவர் டாக்டர் செ. அரவிந்த ராஜா கூறினார்.
இந்த பிரதான விழா எதிர் வரும் 10 அக்டோபர் 2026 தென் கொரியாவில் உள்ள பூசான் நகரில் நடைபெறும் என்றார் அவர்.
இந்த விழாவை கொரிய தமிழ் சங்கம் மற்றும் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கம் தமிழியல் ஆய்வு மையம்(சென்னை-88) இணைந்து வழங்க இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தென் கொரியாவில் நமது தமிழ் மொழியையும், மரபுத் தொடர்பு மற்றும் பண்பாட்டு விழுமியங்களையும் கொண்டாடும் வகையில் இந்த விழா நடைபெற இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த பிரதான விழாவில் ஆய்வரங்கம், கவியரங்கம், கலை விழா & கலையரங்கம் மற்றும் விருதரங்கம் ஆகிய சிறப்பு அம்சங்கள் நடைபெற இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தென் கொரியாவில் வசிக்கும் தமிழ் மக்கள் ஒன்றிணைய இந்த விழா ஒரு பொன்னான வாய்ப்பு என அவர் குறிப்பிட்டார்.
நாடு கடந்து நாம் வாழ்ந்தாலும், எங்கிருந்தாலும் அவ்வப்போது நாம் தமிழ் மொழிக்காக ஒன்றிணைய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த விழாவிற்கான பதிவுகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றார் அவர்.

தமிழைக் காக்க, தமிழ் மொழியை காக்க இந்த பிரதான விழாவில் திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு தென் கொரியாவில் உள்ள தமிழ் மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே அண்மையில் சியோல் நகரில் நடைபெற்ற மனித உரிமை மீதான அனைத்துலக கருத்தரங்கில் கலந்து கொண்ட அலை ஓசை ஊடகத்தின் தலைமை ஆசிரியர் நவநீத கிருஷ்ணன் ரத்தினம் டாக்டர் அரவிந்த ராஜாவை சந்தித்து இந்த விழா குறித்து உரையாடினார்.
இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு மலேசிய தமிழ் மக்களுக்கும் டாக்டர் அரவிந்த ராஜா கோரிக்கை விடுத்தார்.



