
கோத்தா பாரு மற்றும் இந்தோனேசியா தலைநகரான ஜாக்கார்த்தா இடையே நேரடி விமான சேவையை ஏர் ஆசியா தொடங்குகிறது.
அந்த நாட்டிற்கு ஏர் ஆசியா மேற்கொள்ளும் 20 ஆவது வழித் தடம் இதுவாகும்.
எதிர் வரும் 16 ஜூன் 2026 முதல் வாரத்திற்கு 4 முறை இந்த நேரடி விமான சேவையை ஏர் ஆசியா மேற்கொள்ளவிருக்கிறது.
மலேசியாவில் கிழக்குக்கரை மாநிலம் மற்றும் இந்தோனேசியாவில் தலைநகருக்கிடையே தொடர்பை வலுப்படுத்த இந்த சேவை துணை புரியும்.
கோத்தா பாரு மற்றும் இந்தோனேசியாவிற்கிடையே அனைத்துலக விமான சேவையை மேற்கொள்ளும் முதல் விமான நிறுவனம் ஏர் ஆசியா என்பது குறிப்பிடத்தக்கது.
கிளந்தானின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் மருத்துவ பயணத்திற்கும் இந்த நேரடி விமான சேவை முக்கிய பங்கை ஆற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டு தனது சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் 12 மில்லியன் உள்நாட்டு மற்றும் அனைத்துலக சுற்றுப்பயணிகள் வருகையை கிளாந்தான் அரசாங்கம் இலக்காக கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு 11 மில்லியன் சுற்று பயணிகள் கிள்ளான் மாநிலத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.

இவர்களில் 90 விழுக்காட்டினர் உள்நாட்டு சுற்றுப்பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு பிரச்சாரத்தையொட்டி 4.6 மில்லியன் இந்தோனேசிய சுற்றுப்பயணிகள் வருகையை மலேசிய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இதனிடையே இந்த நேரடி விமான சேவை கிளாந்தான் மற்றும் இந்தோனேசியா தலைநகருக்கிடையே சுற்றுலா மற்றும் வர்த்தகத் துறையை வலுப்படுத்தும் என ஏர் ஆசியா மலேசியாவின் தலைமை நிர்வாகி டத்தோ கேப்டன் பாரே மாஸ்புத்ரா கூறினார்.
கிழக்குக்கரை நகருக்கு அதிகமான அனைத்துலக சுற்றுப்பயணிகள் வருகைக்கு இந்த நேரடி விமான சேவை உதவும் என்றார் அவர்.
குறிப்பாக மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்க கிளந்தான் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இந்த நேரடி விமான சேவை துணை புரியும் என்றார் அவர்.
கோத்தா பாரு மற்றும் ஜாக்கார்த்தா மலாய் முஸ்லிம் பாரம்பரிய கலாச்சார அம்சத்தின் ஒற்றுமையை கொண்டுள்ளதால், இந்த நேரடி விமான சேவை நல்ல வரவேற்பை தரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசியா மற்றும் இந்தோனேசியாவிற்கிடையே வாரத்திற்கு 370 விமான சேவைகளை ஏர் ஆசியா மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கிடையே 30 லட்சம் பயணிகளை ஏர் ஆசியா கொண்டு சென்றுள்ளது.


