
கோயில் ஹராம்’ அல்லது ‘சட்டவிரோத கோயில்கள்’ எனக் கூறி எதிர்ப்பு பேரணியை நடத்த திட்டமிட்டிருக்கும் தரப்பினரை கெராக்கான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ பரமேஸ்வரன் கணேசன் கடுமையாக சாடினார்.
இந்த தரப்பினர் இந்நாட்டில் உள்ள இந்துக்களை புண்படுத்தும் வகையில் இனவாத போக்கை கடைப்பிடித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பல இனங்கள் அமைதியாக வாழ்ந்து வரும் மலேசியாவில், இந்த தரப்பினரின் போக்கு நாட்டில் நல்லிணக்கத்திற்கு மிரட்டலாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நாட்டில் நூற்றாண்டு காலமாக தமிழ் பள்ளிகளும் கோவில்களும் செயல்பட்டு வருகின்றன.
பிரிட்டிஷார் நாட்டிற்கு சுதந்திரத்தை ஒப்படைக்கும் பொழுது இந்த கோவில்களையும் ஒப்படைத்து சென்றுள்ளனர் என்பதை எந்த ஒரு தரப்பினரும் மறந்து விடக்கூடாது.
நாட்டில் அனுமதி இல்லாத பல கோயில்கள் இருந்தாலும், பல ஆண்டு காலம் இந்த கோயில்கள் இயங்கி வருகின்றன என்றார் அவர்.
ஆனால் பொறுப்பற்ற இந்த தரப்பினர் திடீரென ‘கோயில் ஹராம்’ என கொக்கரிப்பது ஏன்? என அவர் கேள்வி எழுப்பினார்.
அதே வேளையில் இந்த விவகாரத்திற்கு ஒரு எதிர்ப்பு பேரணி நடத்துவது அவசியம் தானா? என அவர் வினவினார்.
நாட்டில் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் கோயில்களின் நிர்வாகம் நிலப் பிரச்சனை, நிலப்பட்டா, நீதி பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இப்பிரச்சனைக்கு தீர்வு காண கோயில் நிர்வாகம் நில அலுவலகம், மாவட்ட அலுவலகம் உட்பட பல்வேறு அரசாங்க அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு அதற்கு தீர்வு காண பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த கோயில்களின் பின்னணிகளை சற்றும் தெரிந்து கொள்ளாத இந்த பொறுப்பற்ற தரப்பினர் எதிர் வரும் சனிக்கிழமை எதிர்ப்பு பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளது மிகவும் வருந்தத்தக்க செயலாகும்.
இந்த சட்ட விரோத பேரணியை நடத்த போலீசார் அனுமதி தரக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
‘சட்டவிரோத கோயில்கள்’ என்ற போர்வையில் இந்த தரப்பினர் ‘சட்டவிரோத பேரணியை’ நடத்த விருப்பத்தை போலீசார் ஒரு போதும் அனுமதிக்க கூடாது என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்நாட்டில் உள்ள இந்துக்களின் உணர்வுகளுக்கு இவர்கள் மதிப்பளிக்க வேண்டும் என டத்தோ பரமேஸ்வரன் வலியுறுத்தினார்.


