
அண்மையில் பிலிப்பைன்ஸ் செபு நகரில் நில நடுக்கம் மற்றும் டினோ சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் மக்களுக்கு உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா உதவிக் கரம் நீட்டியது.
இந்தப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட செபு வட்டார மக்களுக்கு ஏர் ஆசியா அறக்கட்டளையின் மூலம் ஏர் ஆசியா இந்த உதவிகளை வழங்கியது.
இங்கு உள்ளூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண மற்றும் மீட்சி திட்டங்களுக்காக 15 நவம்பர் 2015 முதல் 14 ஜனவரி 2026 வரை விற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டுகளிலிருந்து PHP 15-ஐ(பிலிப்பைன்ஸ் நாணயம்) ஏர் ஆசியா நன்கொடையாக வழங்குகிறது.
இதனிடையே விமான டிக்கெட்டுகள் மற்றும் வழித்தடங்களை அப்பாற்பட்டு, மக்களுடன் ஒன்றிணைவதே எங்கள் அனைவரின் மனதில் பதிந்துள்ளதாக கேப்பிட்டல் ஏ தலைமை செயல்முறை அதிகாரியும் மற்றும் ஏர் ஆசியா எவியேஷின் குழுமத்தின் ஆலோசகருமான டான்ஸ்ரீ டோனி பெர்னான்டஸ் கூறினார்.
‘இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட எங்களின் Allstars குழும உறுப்பினர்கள் உட்பட பிலிப்பைன்ஸ் மக்களுடன் இணைந்திருப்பது எங்களின் பிரதான நோக்கம்’ என்றார் அவர்.

ஏர் ஆசியாவின் இந்த உதவி இவ் வட்டாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்சிப் பெறவும் மீண்டும் வழக்கமான நிலைக்கு திரும்பவும் பேருதவியாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இங்கு மீட்சித் திட்டங்களுக்கும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கும் ஏர் ஆசியாவின் மனிதநேய பிரிவான ஏர் ஆசியா அறக்கட்டளையின் மூலம் இந்த உதவிகள் வழங்கப்படும் என அவர் சுட்டிக் காட்டினார்.
மக்களின் நல்வாழ்விற்கு ஏர் ஆசியா எப்பொழுதுமே முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே ஒரு இயற்கை பேரிடருக்கு பிறகு மக்கள் மீட்சிப் பெற உதவுவதில் எப்பொழுதுமே தாங்கள் முன்னுரிமை வழங்கி வருவதாக ஏர் ஆசியா அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் யாப் மூன் சிங் கூறினார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதன் மூலம் பல நிவாரண பணிகளுக்கு ஏர் ஆசியா அறக்கட்டளை உதவிகளை வழங்கி வந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஹாய்யான் சூறாவளி (2013),பாலு சுனாமி(2018), மலேசியா வெள்ளங்கள்(2021) ஆகியவற்றின் பேரிடர்களுக்கு அமெரிக்க டாலர் 40 லட்சத்தை ஏர் ஆசியா அறக்கட்டளை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இந்தோனேசியாவில் Arkomjogja நிவாரண பணிகளுக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அண்மையில் ஏர் ஆசியாவின் கோலாலம்பூர்-செபு நேரடி விமான சேவை கொண்டாட்டத்தின் போது ஏர் ஆசியா பிலிப்பைன்ஸ் தலைமை செயல்முறை அதிகாரி கேப்டன் சுரேஷ் பங்காவிடம் இந்த நிவாரண உதவியை ஏர் ஆசியா அறக்கட்டளையின் நிர்வாகி எலேய்ன் டான் வழங்கினார்.
பிலிப்பைன்ஸ்ஸிலிருத்து ஏர் ஆசியா 10 அனைத்துலக நகரங்களுக்கு சிறகடிக்கிறது.


