
கூலாய் ஜூலை 30
கூலாய் – கூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக வழிபாட்டுத் தலங்கள், சமூக அமைப்புகள், கல்வித் துறைக்கு தொடர்ந்து சிறப்பு கவனம் வழங்கப்பட்டு வருகிறது. சமூக வளர்ச்சியை வலுப்படுத்தும் பல்வேறு திட்டங்கள், உதவிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2022 முதல் 2026 ஜூலை வரை, கூலாய் நாடாளுமன்ற அலுவலகத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள ஆலயங்கள், இந்திய சமூக அமைப்புகளின் மேம்பாட்டிற்காக மொத்தம் ரி.ம.343,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு மட்டும் இதுவரை ரி.ம.57,000 நிதி பல்வேறு சமூக நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளதாக கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நி சிங் தெரிவித்தார்.

“ஒர் ஆலயத்திற்கு உதவும்போது, நாம் கூடவே சமூகத்தை வலுப்படுத்துகிறோம். மலேசியாவின் பல்வேறு கலாச்சாரங்களும், சமயங்களும் நமது பலமாகும். இந்த ஒற்றுமையையும், பன்முகத்தன்மையையும் நாம் அனைவரும் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
தொடர்பு துணையமைச்சருமான அவர், முன்னதாக கூலாய், பண்டார் புத்ராவில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வருடாந்திர விழாவில் பக்தர்களோடு கலந்துக் கொண்டார்.
கூலாயில் அவரின் தொடர் ஆதரவின் அடையாளமாக, பண்டார் புத்ரா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு 2023 முதல் 2025 வரை ஆலய மேம்பாடு மற்றும் வருடாந்திர விழா ஏற்பாட்டிற்கு மொத்தம் ரி.ம.50,000 நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த ஆலய வருடாந்திர விழாவில் கலந்துகொண்ட தியோ, தனது தொடர்ச்சியான ஆதரவின் ஒரு பகுதியாக மேலும் ரி.ம.10,000 நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். அதேவேளை, வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சின் ரிபி ஒதுக்கீட்டின் கீழ் 2024ஆம் ஆண்டு இவ்வாலயத்திற்கு ரி.ம.186,500 நிதியும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வழிபாட்டுத் தலங்கள் வளர்ச்சிக்கான ஒதுக்கீடு தவிர்த்து, இந்திய சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் கூலாயில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. 2022 முதல் இவ்வாண்டு வரை, கூலாயில் உள்ள கூலாய் பெசார் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கூலாய் ஆயில் பாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கேலான் தோட்டத் தமிழ்ப்பள்ளி, செடெனாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகிய நான்கு தமிழ்ப்பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்த ரி.ம.487,687 நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தியோ சுட்டிக்காட்டினார்.
தகுதியும் தேவையும் உள்ள தரப்புகளுக்கு தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்த தியோ, உதவி கோரும் தரப்புகள் தங்களது விண்ணப்பங்களை கூலாய் நாடாளுமன்ற அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.



