
புத்ராஜெயா:
மலாய், சீனர், இந்தியர் அல்லது சபா, சரவாக் மக்கள் நாட்டின் எதிரிகள் அல்ல. மாறாக, மலேசியர்களிடையே வெறுப்பையும் பிளவையும் ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபம் தேடுபவர்களே நாட்டின் உண்மையான எதிரிகள் என்றும் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சரும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.
தேர்தல் நெருங்கும் ஒவ்வொரு முறையும் சில தரப்பினர் இனம் மற்றும் மதத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி மக்களிடையே அச்சத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்த முயல்கின்றனர் என்றும், ஆனால் சாதாரண மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் ஒருவரையொருவர் வெறுப்பதில்லை என்றும் அவர் கூறினார்.
தொழிற்சாலைகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், தோட்டங்கள் மற்றும் கட்டுமானத் தளங்களில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மலேசியர்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவதுடன், அவர்களது பிள்ளைகள் ஒரே பள்ளியில் கல்வி கற்று, ஒரே விளையாட்டு மைதானத்தில் விளையாடி, நாட்டின் வெற்றியை ஒன்றாகக் கொண்டாடி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
மக்களிடையே வெறுப்பைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடுபவர்கள், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களே நாட்டின் உண்மையான எதிரிகள் என்றும் யுனேஸ்வரன் குறிப்பிட்டார்.
அவர்கள் மக்களுக்கு நம்பிக்கையை வழங்குவதில்லை; மாறாக அச்சத்தையே விதைக்கின்றனர். தீர்வுகளை முன்வைப்பதற்குப் பதிலாக இல்லாத எதிரிகளை உருவாக்கி மக்களைப் பிரிக்கும் அரசியலில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மலேசியாவின் வளர்ச்சி ஓர் இனத்தால் மட்டுமே உருவாக்கப்படவில்லை என்றும், மலாய் விவசாயிகள், சீன வணிகர்கள், இந்திய ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள், பூர்வகுடியினர், சபா மற்றும் சரவாக் மக்களும் இணைந்து நாட்டை கட்டியெழுப்பியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்கள், பள்ளிகள், சாலைகள், தோட்டங்கள் அமைத்தவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பாதுகாப்புப் படையினர், விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், தொழில்முனைவோர் மற்றும் உழைக்கும் மக்கள் என அனைவரின் பங்களிப்பும் மலேசியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மொழி, இனம், மதம் வேறுபட்டிருந்தாலும், நாட்டின் முன்னேற்றத்திற்காக சிந்திய வியர்வை ஒன்றே என்றும், வலி, வறுமை மற்றும் நம்பிக்கை ஆகியவை இனம், மதம் அல்லது தோல் நிறத்தைப் பார்த்து வேறுபாடு காட்டுவதில்லை என்றும் யுனேஸ்வரன் குறிப்பிட்டார்.
தேசிய மொழியாக மலாய் மொழி நாட்டின் ஒற்றுமையின் அடையாளமாக விளங்குவதுடன், தமிழ், சீனம் உள்ளிட்ட பிற மொழிகளும் மலேசியாவின் பண்பாட்டு பாரம்பரியத்தை வளப்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.
அதேபோல், இஸ்லாம் கூட்டரசின் அதிகாரப்பூர்வ மதமாக இருந்தாலும், இந்து, கிறிஸ்தவம், புத்தம், சீக்கியம், தாவோ உள்ளிட்ட அனைத்து மதங்களையும் அமைதியாக கடைப்பிடிக்கும் உரிமை அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் நினைவூட்டினார்.
மக்களைப் பிரித்து ஆட்சி செய்யும் அரசியல் அணுகுமுறையால், மக்கள் ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம், வேலைவாய்ப்பு, வாழ்க்கைச் செலவு, கல்வி மற்றும் நாட்டின் எதிர்காலம் போன்ற முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் இருக்கச் செய்யப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
வெறுப்பின் அரசியலை இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது என்றும், வெறுப்பு விதைக்கப்பட்டால் அது முன்னறிவிப்பற்ற பாரபட்சமாகவும், பின்னர் பாகுபாடு, பகைமை மற்றும் வன்முறையாகவும் மாறும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.
வரலாற்றில் நிகழ்ந்த பெரும்பாலான பேரழிவுகளும், மக்கள் தங்களுடன் வாழ்பவர்களைச் சக குடிமக்களாக பார்க்காமல் எதிரிகளாகக் கருதத் தொடங்கியபோதுதான் ஏற்பட்டன என்றும், அந்த நிலை மலேசியாவில் ஒருபோதும் ஏற்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், தங்களை வளர்த்த பெற்றோருக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் நாம் பொறுப்பு உடையவர்கள் என்றும், அடுத்த தலைமுறைக்கு வெறுப்பை அல்ல, ஒற்றுமையையும், பாகுபாட்டை அல்ல, அன்பையும், பிரிவினையை அல்ல, நம்பிக்கையையும் விட்டுச் செல்ல வேண்டும் என்றும் யுனேஸ்வரன் தெரிவித்தார்.
ருகுன் நெகாரா என்பது வெறும் உறுதிமொழி அல்ல; ஒருவரையொருவர் மதித்து, அரசியலமைப்பைப் பாதுகாத்து, “பங்சா மலேசியா” என்ற ஒரே குடும்பமாக வாழ்வதற்கான நமது வாக்குறுதி என்றும் அவர் கூறினார்.
மலேசியா ஓர் இனத்திற்கோ, ஒரு மதத்திற்கோ அல்லது ஒரு பிராந்தியத்திற்கோ மட்டும் சொந்தமான நாடு அல்ல என்றும், அமைதி, நீதி மற்றும் ஒற்றுமையை நேசிக்கும் ஒவ்வொரு மலேசியருக்கும் சொந்தமான நாடு என்றும் குறிப்பிட்ட அவர், மக்கள் ஒற்றுமையாக இருந்தால் மலேசியாவைப் பிளவுபடுத்த யாராலும் முடியாது என்று யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.


