
தனது 17 வயதில் காய்ச்சலுக்கு தவறான ஆன்ட்டிபயாட்டிக் வழங்கிய காரணத்தினால் தனது கண் பார்வையை இழந்தவர் தான் பரமேஸ்வரி பஞ்சாசரம்!
நான் பிறந்து வளர்ந்தது முழுவதும் கோலாலம்பூர் நகரத்தில்தான். படிவம் ஐந்து படிக்கும் காலகட்டத்தில்தான் எனக்கு கண் பார்வை பிரச்சனை ஏற்பட்டது. காய்ச்சல் என்று மருத்துவமனைக்குச் சென்ற பொழுது அங்கு வழங்கிய தவறான மருந்தினால் ஏற்பட்ட விளைவுதான் கண் பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பல சிகிச்சைகளையும் அறுவை சிகிச்சைகளையும் அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கேரளாவில் உள்ள சித்த மருத்துவ முறைகளிலும் மேற்கொண்டேன். இருந்தும் எந்த பயனும் கிடைக்காமல் முழுமையாக கண்பார்வை இழந்தேன் என்று பரமேஸ்வரி தமிழ் மலரிடம் கூறினார்.
19 வயது வரை பெற்றோர்கள் எனது மருத்துவ சிகிச்சையை பார்த்துக் கொண்டனர். ஆனால் அதன் பிறகு அவர்களுக்கு உதவும் வகையில் நானே என் மருத்துவர் சார்ந்த நிலையை சுயமாக படித்து தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அப்பொழுது தான் என்னுடைய இந்த கண் பிரச்சனை சார்ந்து பல விடயங்கள் எனக்கு கிடைத்தன.
பிறந்ததிலிருந்து 17 வருடமாக கண் பார்வை இருந்து இரண்டு வருடமாக திடீரென்று கண் பார்வை இழப்பது மிகக் கொடிய விஷமாகும். பல மன அழுத்தங்களுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் வகையிலும் பலமுறை முடிவெடுத்துள்ளேன். ஆனால் என்னுடைய பெற்றோர்கள் என்னை இறுதியாக கேரளாவிற்கு ஆறு மாதம் அனுப்பிவைத்து சிகிச்சை அளிக்க வைத்தனர். அப்பொழுதுதான் உண்மையில் என்னை நானே உணர்ந்து கொண்ட தருணமாக நினைக்கின்றேன். மலேசியாவிற்கு திரும்பிய பிறகு மலேசிய கண்பார்வையற்ற மையத்திற்கு கீழ் பதிவு செய்து அதில் என்னுடைய திறனை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தேன். முதலில் பிரேல் எழுத்தை கற்றுக்கொண்டு மசாஜ் முறையையும் டிப்ளமோ நிலையில் இரண்டு வருடம் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு ஒரு இடத்தில் மூன்று வருடம் வேலை செய்து கொண்டே என்னுடைய இளங்கலை பட்டப் படிப்பையும் முடித்தேன்.

அதன் பிறகு ஒருவரை திருமணம் செய்து கொண்டு இல்லதரசியாக என்னுடைய ஒரு பிள்ளையைப் பார்த்துக் கொண்டு வந்தேன். ஒரு காலகட்டத்திற்கு பிறகு, வீட்டில் இருப்பது தவிர்த்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
வீட்டில் இப்பொழுது கணவர் தான் சமைத்து வருவார். ஆனால், கோவிட் காலகட்டத்தில் நான், என் பிள்ளை, கணவர் வீட்டில் இருக்கும்பொழுது ஏன் நான் சமைக்க கற்றுக்கொள்ள கூடாது என்று என் கணவர் என்னை ஊக்குவித்தார். அவ்வப்போது பல சமையல்களை செய்து அதை காணொளியாக எடுத்து யூடியூப் அகப்பக்கத்திலும் போட ஆரம்பித்தோம். ஆனால், அதற்கேற்ற ஆதரவுகள் எப்பொழுதும் குறைவாகவே இருக்கும். இருப்பினும், தொடர்ந்து மூன்று வருடங்கள் மேலாக என்னுடைய அந்த சமையல் குறிப்புகளை youtube-ல் போட்டுக் கொண்டுதான் வந்தேன். அண்டை அயலார், நண்பர்கள், உறவினர்கள் என பலருக்கு தீபாவளி சமயங்களில் வீட்டில் அழைத்து சமைத்துக் கொடுத்ததும் உண்டு. பலர் பாராட்டியும் இருந்தனர். இவ்வாறே வாழ்க்கை சென்றபோது பிறகும் மனதில் ஏதோ ஒரு கேள்வியும் குழப்பமும் இருந்து கொண்டேதான் இருந்தது. அவ்வப்போதுதான் வேறொரு துறையில் ஈடுபட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

பள்ளி படிக்கும் பொழுது பல விளையாட்டுகளை ஈடுபட்டதுண்டு. வீட்டில் இருக்கும் பொழுதும் சில விளையாட்டுகளை வீட்டில் விளையாடுவேன். ஆனால் ஒரு குழுவாக இணைந்து அதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது எனக்கு இருக்கும்.
கோவிட் காலகட்டத்திற்கு முன்பு என்னுடைய கணவர் கராத்தே வகுப்புகளை நடத்தி வந்தார். அவருடன் சேர்ந்து நானும் கராத்தே சிலவற்றைக் கற்றுக் கொண்டேன். இருப்பினும், அதன் மேல் எனக்கு நாட்டம் இல்லாமல் இருந்தது. பிறகு, யோகா கற்றுக்கொள்ள வேண்டும் என்று அதில் கற்றுக் கொண்டேன். அப்பொழுதும் அதில் நாட்டம் இல்லாமல் இருந்த பொழுது ஜூம்பா கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வகுப்பிற்குச் செல்ல முற்பட்டேன். அப்பொழுது கண்பார்வை இல்லாமல் அதனை கற்றுக் கொள்வதே கடினம் என்று கூறினர்.
இருப்பினும் முயற்சிகள் கைவிடாமல் பல இடங்களில் தேடி இறுதியாக ஹெல்த்தி வெல்டி கிரேஸ் அவர்களைத் தொடர்பு கொண்டேன். எனக்கு கண் பார்வை இல்லை. ஆனால், ஜூம்பா கற்றுக்க வேண்டும் என்று அவரிடம் கூறிய பொழுது நான் அவரை ஏமாற்றுகிறேன் என்று நினைத்தார். ஆனால், முதல் நாள் வகுப்பிற்குச் சென்ற பொழுது உண்மையிலே எனக்கு கண் பார்வை இல்லை என்பதை அவர் தெரிந்து கொண்டார். இருப்பினும், இன்று வரை எனக்கு அனைத்து வகையான அனைவருக்கும் சொல்லிக் கொடுக்கக்கூடிய ஜூம்பாவை சமமாக சொல்லிக் கொடுப்பார்.
ஜூம்பா வகுப்பில் பாட்டிற்கு ஏற்றார் போல நடனங்களை ஞாபகம் வைத்து ஆடுவது எனக்கு கடினம். ஆக அந்த பாட்டின் வெட்டுக்களுக்கேற்றார் போல நானே சுயமாக நடனத்தை ஆடுவேன்.
ஹெல்த்தி வெல்டி கொடுத்த வாய்ப்பு வேறு எந்த இடத்திலும் கிடைக்கவில்லை என்றே கூறலாம். பலர் என்னை கண்பார்வையற்றவர் என்ற நிலையில் என்னுடைய ஆசையை புரிந்து கொள்ளாமல் என்னுடைய குறையை மட்டுமே பார்த்து நிராகரித்தனர். ஆனால், நான் முயற்சியை கைவிடவில்லை. ஜூம்பா வகுப்பிற்கு செல்வது மட்டுமல்லாமல் வீட்டிலும் பல உடற்பயிற்சிகளை செய்து என்னுடைய கணவனுடன் ஜிம்மிற்கும் செல்வேன். இவ்வாறு இருந்த பொழுது தான் வேறு ஏதும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் டிக் டாக்கில் சகாதேவனை பார்த்தேன். அவர் மாடலிங் செய்வதற்கு வயது வரம்பு, அழகு தேவையில்லை. யார் வேண்டுமானாலும் மாடலிங் செய்யலாம் என்று கூறினார். அவரை தொடர்பு கொண்டு மாடலிங் செய்வதற்கு ஆர்வம் உள்ளது என்றும் நான் கண் பார்வையற்றவர் என்று கூறினேன். அவர் சற்று யோசிக்காமல் 23 டிசம்பர் 2023 வகுப்பு ஆரம்பமாகிறது; நீங்கள் தாராளமாக கலந்து கொள்ளலாம் என்று கூறினார்.
கண் பார்வையற்றவர்கள் மாடலிங்கில் ஈடுபடுவது ஆப்பிரிக்கா நாட்டில் மிக சகஜமானது. ஆனால், மலேசியாவில் அது சாத்தியமா என்று பார்த்தால் அது தெரியவில்லை. இருப்பினும், மாடலிங் கற்றுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அதில் ஈடுபட்டேன். பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். இவ்வாறு நடப்பது, எவ்வாறு ஒருவரிடம் உரையாடுவது, பேசுவத, ஆங்கிலத்தில் எவ்வாறு புலமை வாய்ப்பது போன்ற பல விஷயங்களை அங்கு எனக்கு சொல்லிக் கொடுத்தனர். அது மட்டுமல்லாமல், புகைப்பட மாடலாக இருப்பது எனக்கு மிகப் பிடிக்கும். அவ்வகையில் நான் கண் பார்வை அற்றவர் என்று சிறிதும் தெரியாத அளவிற்கு என்னை அழகழகாக மாடலிங் செய்து புகைப்படம் எடுத்தனர். இரண்டு வருடமாக மாடலிங் கற்று வருவதால் இப்பொழுது ஆர்வி குழுமத்தில் ஒரு குழு மேலாண்மையாக இருந்து வருகிறேன்.
கண் பார்வை இல்லாமல் நான் எதிர்கொண்ட சவால்கள் பல. முதலில் பிறவியில் கண் பார்வை இருந்து பிறகு கண்பார்வை இல்லாமல் போனது. அடுத்து என்ன செய்வது? யாரிடம் கேட்பது என்ற குழப்பத்திலேயே இருந்தேன். பிறகு பல சிகிச்சைகளும் அறுவை சிகிச்சைகளும் மேற்கொண்டும் பலன் இல்லாமல் போன பொழுது மன அழுத்தத்திற்காக தற்கொலை செய்து கொள்ளவும் பலமுறை முயற்சி செய்து உள்ளேன். அது மட்டுமல்லாமல் எப்படி வாழ போகிறேன்? இதன் பிறகு எப்படி என் வாழ்க்கை இருக்கும்? இந்த சமுதாயம் என்னை எவ்வாறு பார்க்கும்? எவ்வாறு ஏற்றுக் கொள்ளும் என்றெல்லாம் ஒரு பக்கம் இருக்க கண் வலியினால் பல தடவை துடித்ததும் உண்டு.
அதோடு, கண் பார்வையற்றவர்களுக்கு இந்த சமுதாயத்தில் வாய்ப்புகள் கிடைப்பதே மிகக் குறைவு. மற்றவர்களை காட்டிலும் குறை உள்ளவர்களுக்குதான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், ஆசையும் லட்சியமும் அதிகம் உண்டு. ஆனால், அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு பலர் வேலையில் வாய்ப்புகளை கொடுக்க மறுக்கின்றனர். வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் வாய்ப்பு தேடி ஒவ்வொருவரும் வெற்றி பெறுவர்.

திருமணத்திற்கு முன்பு பெற்றோர்களின் ஆதரவு அதிகமாக இருந்தது. திருமணத்திற்கு பிறகும் இன்றுவரையிலும் அவர்கள் என்னை ஊக்குவித்துதான் வருகிறார்கள். அதே வகையில் என்னுடைய கணவரும் இன்றுவரை எனக்கு அனைத்திற்கும் ஆதரவு கொடுத்து வருகிறார். ஜூம்பா வகுப்பு, மாடலிங், புகைப்படம் என அனைத்திற்கும் அவரால் முடிந்த பண உதவியும் எனக்கு செய்து வந்தார். அதுமட்டுமல்லாமல், அண்மையில் ராஜா சார் இயக்கத்தில் ஒரு குறும்படம் நடித்துள்ளேன். கூடிய விரைவில் அது வெளிவர உள்ளது. இன்னும் ஒரு நாடகத்தில் நடிப்பதற்கும் வாய்ப்பு உள்ளதாக கூறினர். இதன் வழி இன்னும் என்னுடைய லட்சியங்களை அடைவேன் என்று நம்புகிறேன்.
மசாஜ் தொழிலில் எனக்கு அனுபவம் உள்ளதால் ஒரு வருடம் காலமாக ஒரு ஸ்பாவில் பணிபுரிந்தேன். பிறகு, வீட்டிற்கு சென்று மசாஜ் கொடுத்து வந்தேன். கடந்த வருடத்திலிருந்து வீட்டிலேயே ஸ்பா மசாஜ் செய்து வருகிறேன். இதனால் என்னுடைய வேலை வீடு இரண்டையும் முறையை கவனிக்க முடிகிறது.
அடுத்த வருடம் எனக்கு 50 வயது நிரம்ப உள்ளது. அதில் எப்படியாவது மாடலிங் போட்டியில் கலந்து கொண்டு மிஸ்ஸஸ் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனை அடைய கண்டிப்பாக என்னுடைய முயற்சியை தருவேன் என்று பரமேஸ்வரி கூறினார்.
அனைவருக்கும் காட்டிலும் எனக்கு ஒரு விஷயம் கிடைக்க வேண்டும் என்றால் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம் உள்ளது. ஒன்று கிடைக்காமல் போய்விட்டார் அது கிடைக்கவில்லை என்ற வருத்தப்படுவதை விட அதை எவ்வாறு அடைய வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்து அடைவது என்னுடைய வழக்கம். இது நான் மட்டுமல்லாமல் அனைவரும் செய்தால் நிச்சயம் தான் நினைத்த காரியத்தில் வெற்றி நிச்சயம்.


