
மின் சிகரெட்டுகள்(வேப்) பயன்பாட்டை அரசாங்கம் தடை செய்யக் கூடாது என மலேசிய மின் சிகரெட்டுகள் நிறுவனங்கள் இயக்கத்தின்(MOVE) சாம்சுல் காமால் கூறினார்.
இதற்கு மாறாக இதன் கண்காணிப்பு கொள்கையை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
மின் சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டால் சிகரெட் விற்பனை அதிகாரப்பூர்வமாகிவிடும் என அவர் சுட்டிக் காட்டினார்.
தேசிய பொது சுகாதார கொள்கைக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
அறிவியல் ரீதியில் மின் சிகரெட்டுகள் பயன்பாட்டின் பாதிப்பு குறைவு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மையை மின் சிகரெட்டுகள் எதிர்ப்பு அரசு சார்பற்ற அமைப்புகள், அரசாங்க நிறுவனங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினர் இதை ஏற்றுக் கொள்ளும் வரை இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என அவர் சொன்னார்.
அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவகாரத்தில் அரசாங்கம் ஒரு முடிவை செய்யக்கூடாது.
இது பொது சுகாதாரம் மட்டும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை தான் ஏற்படுத்தும் என அவர் சொன்னார்.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் மின் சிகரெட்கள் பயன்பாடு கண்காணிக்கப்பட்டு வருவதால், லட்சக்கணக்கானோர் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் முரண்பாடாக செயல்பட்டால், சட்டவிரோத மின் சிகரெட் பயன்பாடு அதிகரிக்கும் என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
மின் சிகரெட் களில் பயன்படுத்தப்படும் ரசாயனம் என்ன என்பதை முதலில் அரசாங்கம் ஆராய வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
சிகரெட்டுகள் விற்பனைக்கு விதிக்கப்படும் அதே விதிமுறைகளை மின் சிகரெட்டுகள் விற்பனைக்கும் அரசாங்கம் விதிக்க வேண்டும் என அவர் பரிந்துரை செய்தார்.
ஆகையால் இந்த விவகாரத்தில் அரசாங்கம் விவேகமாக செயல்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


