
தனது வளர்ச்சி இலட்சியத்தின் ஒரு பகுதியாக பஹ்ரைனில் மத்திய கிழக்கு மையத்தை உருவாக்க ஏர் ஆசியா திட்டம் கொண்டுள்ளதாக ஏர் ஆசியா குழுமத்தின் நிறுவனர் டான்ஸ்ரீ டோனி பெர்னான்டஸ் கூறினார்.
இது தொடர்பாக பஹ்ரைன் போக்குவரத்து அமைச்சுடன் ஒரு உடன்பாடு ஒப்பந்த கடிதத்தில் கேப்பிட்டல் ஏ பெர்ஹாட் கையெழுத்திட்டுள்ளதாக அந்த மலேசிய தொழிலதிபர் கூறினார்.
‘மத்திய கிழக்கில் பஹ்ரைன் எங்களுக்கு ஒரு சக்தி வாய்ந்த ஏவுக்களம்’என்றார் அவர்.
எதிர் வரும் 2030 ஆண்டுக்குள் பஹ்ரைனிலிருந்து தினசரி 25 விமான சேவைகளை மேற்கொள்ள ஏர் ஆசியா திட்டம் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பஹ்ரைனிலிருந்து மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சிறகடிக்க லைசென்ஸ் உரிமம் பெற தாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆசியா மற்றும் ஐரோப்பியா ஆகிய கண்டங்களுக்கிடையே விமானங்கள் மற்றும் பயணிகளை இணைக்க ஏர் ஆசியா குழுமத்திற்கு ஒரு வளைகுடா மையம் தேவைப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அடுத்த 10 ஆண்டுகளில் நீண்ட காலத் திட்டமாக 600 விமானங்களை கொண்டிருக்க தாங்கள் இலக்கை கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதே காலகட்டத்தில் 143 நகரங்களிலிருந்து 175 நகரங்களுக்கு சிறகடிக்க தாங்கள் திட்டம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அரபு சிற்றரசு மற்றும் கத்தாருக்கு இணையாக பஹ்ரைன் விமான போக்குவரத்தில் ஒரு முத்திரையை பதிக்க திட்டம் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.


