
தொடர்ந்து 16 ஆவது ஆண்டாக உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமாக ஏர் ஆசியா தேர்வு பெற்றது.
அண்மையில் பாரிஸ் நகரில் நடந்த 2025 ஸ்காய்டிரேக்ஸ் உலக விமான நிறுவன விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஏர் ஆசியா இந்த சாதனையை படைத்தது.
130 நகர்களுக்கு மலிவு கட்டணத்தில் விமான சேவைகளை மேற்கொண்டு வருவதை பிரதிபலிக்கும் வகையில் ஏர் ஆசியாவிற்கு இந்த வெற்றி கிடைத்தது.
மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் தனது விமான நிறுவனங்களின் வழி ஏர் ஆசியா விமான போக்குவரத்து துறையை ஆக்கிரமித்து வருகிறது.
கடந்த 16 ஆண்டுகளாக கிடைக்க பெற்று வரும் இந்த அங்கீகாரம் மிகவும் அர்த்தமுள்ள ஒன்று என கடந்த செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் நாட்டில் 2025 பாரிஸ் விமான கண்காட்சியில் இந்த விருதை பெற்றுக் கொண்ட கேப்பிட்டல் ஏ தலைவரும் ஏர் ஆசியா இணை நிறுவனருமான டத்தோ கமாருடின் மெரானுன் கூறினார்.
அனைவரும் மலிவு கட்டணத்தில் விமானங்களில் பறக்க வேண்டும் என்ற ஒரு சிறிய கனவுடன் ஏர் ஆசியாவை தொடங்கினோம் என்றார் அவர்.
16 ஆவது ஆண்டாக கிடைக்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரத்தின் வழி எங்களின் இலக்கை அடைந்துள்ளோம் என்று கூறிக் கொள்வதில் தாங்கள் பெருமை அடைவதாக அவர் தெரிவித்தார்.
மலிவு கட்டணத்தின் வழி விமானத்தில் பயணிக்க வேண்டும் என லட்சக்கணக்கான பயணிகளின் கனவுகளை நாங்கள் நனவாக்கி உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த விருது எங்களுக்கு கிடைத்துள்ள மற்றொரு மாபெரும் சாதனையாகும். தொடர்ந்து வான் போக்குவரத்து துறையில் சாதனையைப் படைக்க இது எங்களுக்கு புத்துணர்ச்சியை தருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே ‘இது எனக்கு கிடைத்த உணர்ச்சிபூர்வமான வெற்றி’ என கேப்பிட்டல் ஏ தலைமை செயல்முறை அதிகாரியும் மற்றும் ஏர் ஆசியா இணை நிறுவனருமான டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறினார்.
முதலாம் ஆண்டில் இரண்டு லட்சம் பயணிகளை கொண்டு சென்று இவ்வாண்டில் ஒரு கோடி பயணிகளை வரவேற்க இலக்கை கொண்டுள்ளோம் என்றார் அவர்.
பயணிகள் வழங்கி வரும் வற்றாத ஆதரவு மற்றும் எங்கள் நிறுவனத்தின் அனைத்து நட்சத்திரங்களின் கடுமையான உழைப்பு தான் இந்த சாதனைக்கு மூலதனமாகும்.
விமான போக்குவரத்து துறையில் ஏர் ஆசியா தொடர்ந்து திடமாக கால் பதித்து வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தனது பயணிகளுக்கு தொடர்ந்து தரமான சேவைகளை வழங்கி வருவது ஏர் ஆசியாவின் இந்த சாதனைக்கு முக்கிய காரணம் என ஸ்காய்டிரெக்ஸ் தலைமை செயல்முறை அதிகாரி எட்வர்ட் பிளாய்ஸ்டர்ட் கூறினார்.
தொடர்ந்து 16 ஆவது ஆண்டாக ஏர் ஆசியா பெற்று வரும் இந்த சாதனை மிகவும் பாராட்டக்கூடிய ஒன்று என அவர் சொன்னார்.
ஏர் ஆசியாவின் மாபெரும் வெற்றியை இந்த விருது பிரதிபலிப்பாக அவர் சொன்னார்


