
பெட்டாலிங் ஜெயா, நவ 13
முஸ்லிம் அல்லாதவர்கள் மிக மோசமான முஸ்லிம் தலைவர்களைவிடவும் அதிகமாக ஒடுக்குமுறையில் ஈடுபடுபவர்கள் என்று கருத்துத் தெரிவித்த பாஸ் கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கைத் துணை தேசிய ஒற்றுமை அமைச்சர் யூனேஸ்வரன் ராமராஜ் கடுமையாகக் கண்டித்துள்ளார். மேலும், அந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று இரவு மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில், குறிப்பாக புக்கிட் காத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஹாடி ஆற்றிய உரையில் இந்தக் கருத்து இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இன்று அறிக்கை வெளியிட்ட யூனேஸ்வரன், மலேசியாவின் பல இன, பல மத சமூகத்தின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டிய மூத்த அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவர் இத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பதைத் தாம் மிகவும் தீவிரமாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
ஒருவரின் மதத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நீதி மற்றும் கொடுங்கோன்மை தீர்மானிக்கப்படும் நிலை எப்போது உருவானது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர் அல்லது மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்பவர் முஸ்லிம் என்பதற்காக மட்டும் சிறந்தவராகக் கருதப்பட வேண்டுமா?
“அதேபோல், நேர்மையானவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் நியாயமாக நடந்துகொள்பவராகவும் இருக்கும் முஸ்லிம் அல்லாத ஒருவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக ஒடுக்குமுறையாளராகக் கருதப்பட வேண்டுமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இத்தகைய சிந்தனை நியாயமற்றது மட்டுமின்றி, வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த சமூகங்களுக்கு இடையில் தப்பெண்ணம், சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையை உருவாக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
தமது விமர்சனம் இஸ்லாத்துக்கு எதிரானது அல்ல என்பதை யூனேஸ்வரன் வலியுறுத்தினார். கூட்டாட்சி அரசியலமைப்பின்படி இஸ்லாம் நாட்டின் கூட்டாட்சி சமயமாக இருப்பதைத் தாம் மதிப்பதாகவும், அதேவேளை மற்ற மதங்களுக்கான உரிமைகளும் அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நீதி, நம்பகத்தன்மை, நேர்மை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவை அனைத்து மதங்களும் வலியுறுத்தும் அடிப்படை விழுமியங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாநிலத் தேர்தல் பிரசாரத்தின்போது இத்தகைய கருத்து வெளியிடப்பட்டிருப்பது குறிப்பாக ஏமாற்றமளிப்பதாகக் கூறிய அவர், தேர்தல் என்பது கொள்கைகள், சேவைப் பதிவுகள், நேர்மை மற்றும் ஆட்சி நிர்வாகத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெற வேண்டுமே தவிர, பிற மதச் சமூகங்கள் மீது அச்சத்தையும் தப்பெண்ணத்தையும் தூண்டும் தளமாக இருக்கக்கூடாது என்றார்.

முஸ்லிம் அல்லாதவர்கள் இந்த நாட்டில் அந்நியர்கள் அல்ல என்றும், நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதோடு, அமைதியைப் பாதுகாக்கவும், வரி செலுத்தவும், தங்களின் முஸ்லிம் சக குடிமக்களுடன் இணைந்து நாட்டின் வளத்தைக் கட்டியெழுப்பவும் அவர்கள் பங்காற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் எந்தவொரு குடிமகனும் தாழ்வாகக் கருதப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 8(1)-ஐச் சுட்டிக்காட்டிய யூனேஸ்வரன், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் அனைவருக்கும் சட்டத்தின் சமமான பாதுகாப்பு உண்டு என்றும் குறிப்பிட்டார்.
அதேபோல், ருக்குன் நெகாராவின் சட்ட ஆட்சி கொள்கையின்படி, ஒருவரின் மத அடையாளத்தை வைத்து அல்லாமல், சட்டத்தின் அடிப்படையிலேயே பொறுப்பும் கணக்குக் கேட்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
அரசியலமைப்பின் மேலாதிக்கம், சட்ட ஆட்சி, நற்பண்பு மற்றும் ஒழுக்கம் ஆகிய தேசியக் கொள்கைகளும் இதையே வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
“தவறு என்பது யார் செய்தாலும் தவறுதான். ஒடுக்குமுறை என்பது யார் செய்தாலும் ஒடுக்குமுறைதான்,” என்று அவர் கூறினார்.
மேலும், மதம் அல்லது இன வேறுபாடின்றி அனைத்து குடிமக்களிடமும் ஆட்சியாளர்கள் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் ஹாடி கூறியிருந்ததை யூனேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
“அப்படியிருக்க, முஸ்லிம் அல்லாதவர்கள் பொதுவாக அதிக ஒடுக்குமுறையாளர்கள் என்று சித்தரிக்கும் கருத்தை எவ்வாறு அதனுடன் இணைத்துப் பார்க்க முடியும்?” என்று கேள்வி எழுப்பிய அவர், இது குறித்து தெளிவான மற்றும் பொறுப்பான விளக்கத்தை ஹாடி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஹாடி தனது அரசியல் மற்றும் மதக் கொள்கைகளைப் பாதுகாக்கும் உரிமை கொண்டவர் என்பதை ஏற்றுக்கொண்ட யூனேஸ்வரன், கருத்துச் சுதந்திரத்துடன் மற்ற சமூகங்களை இழிவுபடுத்தாமலும் தேசிய நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமலும் பேச வேண்டிய தார்மீகப் பொறுப்பும் உள்ளது என்றார்.
எனவே, தமது கருத்தின் உண்மையான பொருள் என்ன என்பதை ஹாடி பொதுமக்களுக்கு விளக்குவதுடன், பொதுமைப்படுத்தப்பட்ட அந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“மதம் என்பது ஒடுக்குமுறைக்கான அனுமதிப் பத்திரம் அல்ல. மத வேறுபாடு என்பது ஒருவர் ஒடுக்குமுறையாளர் என்பதற்கான ஆதாரமும் அல்ல.
“மலேசியா அனைவருக்கும் சொந்தமான நாடு. தேசிய ஒற்றுமையை அரசியலுக்காகப் பணயம் வைக்கக்கூடாது,” என்று யூனேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.


