
கோலாலம்பூர், நவ 13
அரசாங்கத்தின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் முக்கியப் பங்காற்றி வருவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தாம் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி மனிதவள அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், அமைச்சின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக 40,000க்கும் மேற்பட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான முக்கியத் தொடர்புப் பாலமாக ஊடகங்கள் விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், தகவல்களைப் பொறுப்புடனும் நெறிமுறைகளுடனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகவியலாளர்களின் பங்களிப்பைப் பாராட்டினார்.
“இங்கு ஒரு மண்டபத்தில் நான் பேசும்போது, அதிகபட்சம் 500 பேர் மட்டுமே அதைக் கேட்கலாம். ஆனால், இங்கு இருக்கும் ஊடக நண்பர்கள் மூலம் அந்தத் தகவல் லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைகிறது.
“இது மிகப்பெரிய பொறுப்பும் பணியுமாகும். ஊடகப் பணி எளிதானதல்ல என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இருப்பினும், நீங்கள் அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறீர்கள்,” என்றார்.
பெர்கேசோ ஏற்பாட்டில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான ஊடக விருது விழாவில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, இவ்வாண்டு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘கென்சானா விருது’ (Kencana Award), அனைத்து விருதுப் பிரிவுகளிலும் சிறந்த படைப்பைத் தேர்ந்தெடுத்து, சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஊடகப் பணிகளுக்கான உயரிய அங்கீகாரமாக அமையும் என ரமணன் குறிப்பிட்டார்.

மேலும், சர்வதேச சமூகப் பாதுகாப்புச் சங்கத்தின் (ISSA) தலைவராக பெர்கேசோ தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் அஜீஸ் முகமட் நியமிக்கப்பட்டிருப்பதையும் ரமணன் பாராட்டினார்.
165 நாடுகளின் வாக்குகளின் அடிப்படையில் கிடைத்துள்ள இந்த நியமனம், மலேசியாவின் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் சர்வதேச அங்கீகாரத்தைப் பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.
“பெர்கேசோவில் நாம் மேற்கொள்ளும் பணிகள் மலேசிய அளவில் மட்டுமல்ல; உலகத் தரத்திலும் சிறந்து விளங்குகின்றன,” என்றார்.
இதற்கிடையில், 50 ஆண்டுகள் ஊடகத் துறையில் பணியாற்றியதுடன், மக்கள் ஓசை நாளிதழில் 15 ஆண்டுகள் மூத்த ஆசிரியராகச் சேவையாற்றிய மறைந்த டாக்டர் பி.ஆர். ராஜனுக்கும் ரமணன் புகழாரம் சூட்டினார்.
இந்நிகழ்வில் பெர்கேசோ தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான் கமால், மீடியா பிரிமா நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி டத்தோ முகமட் எபெண்டி ஒத்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


