
நாட்டில் தமிழ் இலக்கியம், நூல்கள், கவிதைகள், கட்டுரைகளின் படைப்பாளர்களை கௌரவிக்கும் வகையில் சிரம்பானில் தேசிய அளவிலான தமிழ் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.
நேற்று இங்கு சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த திருவிழா தொடர்பான அமைப்பு கூட்டத்தில் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் கூறினார்.
இந்தியர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பு செய்யும் வகையிலும், உள்நாட்டு தமிழ் படைப்பாளர்களை கௌரவிக்கும் வகையிலும் இந்த மாபெரும் திருவிழா நடைபெற இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் ஆகஸ்டு மாதம் திட்டமிடப்பட்டுள்ள இந்த திருவிழாவில் மலேசியாவில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் அமையும் என குணா கூறினார்.
முதல் முறையாக நடைபெறவிருக்கும் இந்த புத்தக திருவிழாவிற்கான அமைப்பு குழுவிற்கு நெகிரி செம்பிலான் மாநில அரசாங்க ஆட்சிக்குழு உறுப்பினர் ஜ. அருள் குமார் மற்றும் தாமும் ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இந்த அமைப்பு குழுவின் தலைவர் எம். காளிதாசன், துணைத் தலைவர் எட்வர்ட், செயலாளர் இன்ப மலர், துணைச் செயலாளர் கலா, பொருளாளர் மோகன் முனுசாமி, செயல் அவை உறுப்பினர்கள் ஆர்.எஸ். ரகு, ராஜகுமார், சேவியர், புஷ்பவல்லி, கலை மற்றும் சரஸ்வதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் மட்டுமின்றி சிறார்களுக்கிடையே வாசிக்கும் கலாச்சாரத்தை உருவாக்கும் நோக்கில் இந்த விழா அமையும் என குணா தெரிவித்தார்.
காரணம் இளைஞர்கள் மற்றும் சிறார்கள் கை தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த திருவிழாவை வெற்றியடைய செய்ய அனைத்து தரப்பினரின் கருத்துக்களை தாங்கள் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த அமைப்புக் குழுவின் அடுத்த கூட்டம் எதிர்வரும் 17 ஜூன் 2025 சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெறும் என அவர் சொன்னார்.


