
விரைவில் நடைபெறவிருக்கும் பிகேஆர் தலைமைத்துவ தேர்தலில் கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கு முன்னாள் காப்பார் எம்பி ஜி. மணிவண்ணன் போட்டியிடுகிறார்.
பிகேஆர் கட்சியில் தாம் வழங்கி வரும் 18 ஆண்டு கால சேவைகளை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடுவதாக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்மின் அலுவலக அரசியல் செயலாளருமான அவர் சொன்னார்.
கட்சி மற்றும் அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளை வகித்து வந்தபோது மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை தம்மால் நன்கு உணர முடியும் என அவர் சொன்னார்.
உண்மைக்கும் மற்றும் நீதிக்கும் துணிந்து குரல் கொடுக்க தாம் தவறியதில்லை என அவர் தெரிவித்தார்.
காப்பார் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் தாம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கட்சிக்கு தொடர்ந்து விசுவாசமாக இருந்து மக்களின் போராட்டத்திற்கு துணை நிற்க என்றுமே தாம் தயார் என பிகேஆர் ஜெலுபு தொகுதி தலைவருமான அவர் சொன்னார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் கொள்கைகளை மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுக்க போவதாக அவர் உறுதியளித்தார்.
தமது இந்த சேவைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தேர்தலில் கட்சி உறுப்பினர்கள் தம்மை தேர்வு செய்வார்கள் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக மணிவண்ணன் தெரிவித்தார்.


