
கோலாலம்பூர் மார்ச் 9
கடந்த சில தினங்களுக்கு முன் நிதி அமைச்சில் அதிகாரி ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் தந்துள்ள விளக்கம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கெராக்கான் கட்சியின் தேசிய உதவி தலைவர் டத்தோ க. பரமேஸ்வரன் கூறினார்.
நாட்டின் முக்கிய அமைப்பில் பாதுகாப்பு இல்லை என்பதை போலீசாரின் விளக்கம் சித்தரிப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் சிசிடிவி கேமரா ஆதாரம் இல்லை என கூறப்படுவது அரசாங்கத்தின் பலவீனத்தை காட்டுவதாக அவர் சொன்னார்.
அரசாங்க அலுவலகத்தில் நடந்துள்ள இந்த துயரமான மரணச் சம்பவம், 2009 ஆம் ஆண்டில் அரசாங்க வளாகத்தில் தியோ பெங் ஹோக் மரணமடைந்த சம்பவத்தை நினைவு கூறுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நிதி அமைச்சில் நடந்துள்ள இந்த மரணச் சம்பவம் குறித்து போலீசார் தந்துள்ள விளக்கம் மன நிறைவு அளிக்கவில்லை.
போலீசாரின் விளக்கம் மக்களிடையே குழப்பம் மற்றும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி கேபிள் கயிற்றால் கழுத்து மற்றும் கால்கள் கட்டப்பட்டு தரையில் இறந்த கிடந்ததாக கோலாலம்பூர் போலீஸ் படை தலைவர் ருஸ்டி முகமட் இசா கூறினார்.மார்ச் இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 8 மணிக்குள் இந்த சம்பவம் நடந்திருக்கும் என போலீசார் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே இந்த மரண சம்பவம் குறித்து உண்மை நிலையே அறிய ஒரு சுயேச்சை விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என டத்தோ பரமேஸ்வரன் வலியுறுத்தினார்.
இந்த மரணம் குறித்து உண்மை என்ன என்பதை இந்நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும் என அவர் சொன்னார்.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் அலட்சிய போக்கை கடைபிடிக்கக் கூடாது என அவர் நினைவுறுத்தினார்.


