
சிரம்பான் ஜெயா மார்ச் 9
சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய தாமான் சிரம்பான் ஜெயா பிரிவு 5-ல் நோன்பு கஞ்சி விநியோக த் திட்டத்தை பாக்காத்தான் ஹராப்பன் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் தொடக்கி வைத்தார்.
2025 நோன்பு மாதத்தை முன்னிட்டு நோன்பு கஞ்சி சமைத்தல் மற்றும் விநியோகித்தல் திட்டத்தில் அவர் கலந்து கொண்டு வட்டார மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
நோன்பு மாதத்தில் மக்களின் தியாகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த திட்டம் நடத்தப்படுவதாக குணா தெரிவித்தார்.
அதே வேளையில் பல இன மக்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்த இது போன்ற திட்டம் உதவும் என அவர் தெரிவித்தார்.
இந்த த் திட்டத்தை வெற்றியடையச் செய்ய வெ 500-க்கான காசோலையை அவர் வழங்கினார்.
நாட்டில் அதிகரித்து வரும் ஊழல் மற்றும் இனம், மதம், அரச குடும்பம் சம்பந்தப்பட்ட 3R சர்ச்சைக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வு வேண்டுமென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இதுபோன்ற செயல்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என அவர் சொன்னார்.
இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக அரசு மலேசியா போலீஸ் படை கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குணா வலியுறுத்தினார்.
நாட்டில் பொறுப்பற்ற சில தரப்பினர் இது போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் தலைமையிலான மாநில மடானி அரசாங்கம் மக்களின் நலன்களில் அதிக கவனத்தை செலுத்தி வருவதாக அவர் சொன்னார்.



