
கோலாலம்பூர் மார்ச் 9
இந்துக்கள் உச்சரிக்கும் ‘வேல் வேல்’ தெய்வீகச் சொல்லை மது போதை மற்றும் பேய் ஆட்டத்திற்கு ஒப்பிட்டுள்ள இஸ்லாமிய மத போதகர் ஜம்ரி வினோத்திற்கு எதிராக இங்குள்ள செந்தூல் காவல் நிலையத்தில் போலீஸ் புகார் செய்யப்பட்டது.
இந்துக்களின்
‘வேல் வேல்’ புனித சொல்லை ஜம்ரி வினோத் கேவலப்படுத்தியுள்ளதாக மலேசிய மக்கள் உருமாற்று இயக்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு தமது போலீஸ் புகாரில் கூறினார்.
தைப்பூச கொண்டாட்டத்தில் காவடி ஆட்டத்தின் போது உச்சரிக்கப்படும் ‘வேல் வேல்’ சொல்லை மது போதை மற்றும் பேய் ஆட்டம் என ஒப்பிட்டுள்ள ஜம்ரி வினோத்தை போலீசார் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இந்துக்களை இழிவு படுத்தி வரும் ஜம்ரி வினோத்திற்கு எதிராக மலேசிய மக்கள் உருமாற்று இயக்கம் மூன்றாவது முறையாக போலீஸ் புகார் செய்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஏற்கனவே இந்த நபருக்கு எதிராக தமது இயக்கம் இரண்டு போலீஸ் புகார்களை செய்து இருந்த போதிலும், இந்த நபருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தொடர்ந்து இந்நாட்டில் உள்ள இந்துக்களின் மனதை புண்படுத்தி வரும் இந்த பகுத்தறிவற்ற நபருக்கு எதிராக இப்பொழுது மூன்றாவது முறை போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.
இம்முறை செய்யப்பட்டுள்ள போலீஸ் புகாரை தொடர்ந்து, காவல்துறை ஜம்ரி வினோத்தை எதிராக அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இம்முறை இந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இந்த விவகாரத்தை அரச மலேசியன் போலீஸ் படை தலைவரிடம் தாங்கள் கொண்டு செல்லவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த பொறுப்பற்ற நபர் தொடர்ந்து இந்திய சமூகத்தின் மனதை புண்படுத்தி வருவது வேதனையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பல இன மக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் மலேசியாவில், ஜம்ரி வினோத் போன்ற புல்லுருவிகளை மலேசியர்கள் புறக்கணிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த போலீஸ் புகாரில் டத்தோ மகேன், டத்தோ ஷாமிளா, ராஜன், தயாபரன், அந்தோணி, சிவா, குணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


