
சுபாங் ஜன 18
சபா, கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்திலிருந்து சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்திற்கு பாத்தேக் ஏரின் முதல் விமான சேவை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த புதிய விமான சேவை சுபாங்கிலிருந்து பாத்தேக் ஏர் மேற்கொள்ளும் மூன்றாவது விமான சேவையாகும். சுபாங்கிலிருந்து கிழக்கு மலேசியாவிற்கு பாத்தேக் ஏரின் விரிவாக்கத்தை இது காட்டுகிறது.
ஏற்கனவே பினாங்கு மற்றும் கோத்தா கினபாலுவிற்கிடையே நேரடி விமான சேவையை பாத்தேக் ஏர் தொடங்கி வெற்றி கண்டுள்ளது.
கிழக்கு மலேசியாவிற்கு பயணிக்கவிருக்கும் வர்த்தக மற்றும் சுற்றுப்பயணிகள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு (கேஎல்ஐ) பதிலாக சுபாங் விமான நிலைய சேவையை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
நேற்று கோத்தா கினபாலுவிலிருந்து சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையம் வந்தடைந்த பாத்தேக் ஏர் பயணிகளை மலேசிய சுற்றுலா கழகத்தின் அதிகாரிகள் அன்பளிப்பு பைகளை வழங்கி இன்முகத்துடன் வரவேற்றனர்.
மலேசிய சுற்றுலா கழகத்தின் உள்நாட்டு மற்றும் நிகழ்ச்சிகள் பிரிவின் துணை இயக்குனர் நாடியா ஹானிம் மற்றும் பாத்தேக் ஏரின் அதிகாரிகளும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதனிடையே இந்த புதிய விமான சேவை 2025 சிலாங்கூருக்கு வருகை புரியும் ஆண்டு பிரச்சாரத்திற்கு பொருத்தமான நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக பாத்தேக் ஏர் விமான நிறுவன தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
பாத்தேக் ஏரின் இந்த புதிய விமான சேவை சிலாங்கூர் சுற்றுலா துறையை வலுவடையச் செய்யும் என தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
மலேசிய சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து துறைக்கு பாத்தேக் ஏரின் பங்களிப்பை கண்டு தாங்கள் பெருமைப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கிழக்கு மலேசியாவில் இதர நகரங்களுக்கு தனது விமான சேவையை பாத்தேக் ஏர் விஸ்தரிப்பு செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போது கோத்தா கினபாலுவிலிருந்து தாவாவ் விமான நிலைத்திற்கு தனது விமான சேவையை பாத்தேக் ஏர் தொடங்கியுள்ளதாக அவர் சுட்டி காட்டினார்.
இதனிடையே பாத்தேக் ஏரின் இந்த புதிய விமான சேவை பொருத்தமான நேரத்தில் அமைந்துள்ளதாக மலேசிய சுற்றுலா கழகத்தின் தலைமை இயக்குனர் மனோகரன் பெரியசாமி கூறினார்.
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் பிரச்சாரத்திற்கு ஏற்ப பாத்தேக் ஏரின் இந்த புதிய விமான சேவை அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சபாவின் இயற்கை வள மற்றும் பாரம்பரிய கலாச்சாரங்களை தீபகற்ப மலேசியா மக்கள் கண்டு மகிழ இந்த புதிய விமான சேவை துணை புரியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


