
ஷா ஆலம் டிச 16
கட்சியின் பேராளர்களில் இன மற்றும் மகளிர் கோட்டா முறையை அறிமுகம் செய்ய பிகேஆர் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம் ஒரு துணிச்சலான மற்றும் முற்போக்கான நடவடிக்கை என பிகேஆர் உதவி தலைவர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
அரசியல் நடைமுறையில் சமத்துவம் மற்றும் சமூக நீதியை உறுதி செய்ய கட்சியின் நிலைப்பாட்டை இது காட்டுவதாக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சருமான அவர் சொன்னார்.
கடந்த காலங்களில் கட்சியின் பேராளர்களில் இந்த தரப்பினரின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருந்து வந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். கட்சியில் முடிவுகள் எடுக்கப்படும் நடைமுறையில் பல இனம் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்து வருகிறது.
இது தொடர்பாக இன்று நடைபெற்ற பிகேஆர் சிறப்பு மாநாட்டில் செய்யப்பட்டுள்ள சட்ட திருத்தம் மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று என்றார் அவர்.
இந்த கோட்டா அறிமுகம் செய்யப்படுவதால், இந்த தரப்பினார் தங்களின் கருத்துக்களை துணிச்சலாக வெளிப்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.
அதே வேளையில் பல இனத்தவர்களின் தேவைகள் என்ன என்பதை வெளிப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
மேலும் அரசியலில் மகளிரின் பங்கு அதிகரிக்க இது ஒரு முன்னெடுப்பு என அவர் சுட்டிக் காட்டினார்.
அதே வேளையில் இந்த கோட்டாவில் இன்றைய சிறப்பு பேராளர்கள் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் பூஸியா சாலே வலியுறுத்தியுள்ள தலைமைத்துவ மேம்பாட்டு திட்டம் மற்றும் அரசியல் கல்வியும் இணைக்கப்பட வேண்டும் என துணையமைச்சர் சரஸ்வதி வலியுறுத்தினார்.


