
நைரோபி நவ 18
வரலாற்று பூர்வமான ஏர் ஆசியா எக்ஸின் கோலாலம்பூர் மற்றும் கென்யா தலைநகரான நைரோபிக்கான நேரடி விமான சேவை இரு நாடுகளுக்கிடையே வர்த்தக மற்றும் சுற்றுலா துறையை வலுவடைய செய்யும் என மலேசியாவிற்கான கென்யா தூதர் எகித்தெலா மொரு நம்பிக்கை தெரிவித்தார்.
ஆப்பிரிக்கா கண்டத்திற்கு ஏர் ஆசியா எக்ஸின் இந்த நேரடி விமான சேவை ஒரு புதிய சகாப்தம் என்றார் அவர்.
இந்த புதிய விமான சேவை மலேசியா மற்றும் கென்யா மக்களுக்கிடையே உறவுகள் மற்றும் புரிந்துணர்வுகளை வலுபெற செய்யும் என அவர் சொன்னார்.
அதேவேளையில் இவ்விரு நாடுகளின் கலை மற்றும் கலாச்சாரங்களை இவர்கள் நன்கு புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அடுத்த ஆண்டு இவ்விரு நாடுகளின் தூதரக உறவுகளை கொண்டாடும் 60 ஆண்டு என்பதால் ஏர் ஆசியா எக்ஸின் இந்த நேரடி விமான பொருத்தமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே இந்த நேரடி விமான சேவை ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளதாக ஏர் ஆசியா எக்ஸின் தலைமை செயல்முறை அதிகாரி பென்யாமின் இஸ்மாயில் கூறினார்.
ஏர் ஆசியா எக்ஸின் முதல் முறையாக ஆப்பிரிக்கா கண்டத்தில் கால் பதித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆசியா மற்றும் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் இந்த நேரடி விமான சேவையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் சொன்னார்.
கென்யா தலைநகரான நைரோபி பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மலிவு விலை கட்டணத்தில் ஆசிய மற்றும் ஆசியான் நாடுகளைச் சார்ந்த சுற்றுப் பயணிகள் கிழக்கு ஆப்பிரிக்காவை சென்றடைய முடியும் என அவர் தெரிவித்தார்.


