Monday, September 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சீன மற்றும் இந்திய சமூகங்களை இழிவுபடுத்திய சானுசி மீது சட்டம் பாய வேண்டும்.

கோலாலம்பூர் ஜூலை 27
இந்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான சீன மற்றும் இந்தியர்களை இழிவு படுத்தியுள்ள பாஸ் கட்சியை சேர்ந்த முகமட் சானுசி மீது சட்டம் பாய வேண்டும் என மலேசிய மக்கள் மறுவாழ்வு சங்கத்தின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அழகேசு வலியுறுத்தினார்.
அண்மையில் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் ஒன்றில்
‘சீனர்களுக்கு சீனா, இந்தியர்களுக்கு இந்தியா, ஆனால் மலாய்காரர்களுக்கு தானா மெலாயு மட்டுமே’ என இனவாதமாக பேசியுள்ள இந்த பாஸ் தலைவருக்கு எதிராக பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மலேசிய மக்களிடையே இனவாத பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இவரின் உரை குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணை பிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் அமிடி உட்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சானுசி விவகாரத்தில் போலீஸ் மெத்தன போக்கை கடைப்பிடிக்க கூடாது என அவர் நினைவுறுத்தினார்.
இந்த நாடு மலாய்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள்,டாயாக் உட்பட அனைத்து இனத்தவர்களுக்கு சொந்தம் என்பதை இந்த இனவாத அரசியல்வாதி மறந்துவிட்டாரா? என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்நாட்டில் உள்ள இந்தியர்கள் மற்றும் சீனர்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்பதை இவர் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்நாட்டிலுள்ள சீனர்கள் மற்றும் இந்தியர்கள் வந்தேறிகள் அல்ல என்ற வரலாற்றை சானுசி படித்து தெரிந்து கொண்டிருந்தால் இப்படி இனவாதமாக பேசியிருக்க மாட்டார்.
பல இனங்கள் வசிக்கும் ஒரு மாநிலத்தின் மந்திரி பெசாரான இவர் சீனர்களையும் இந்தியர்களையும் இழிவு படுத்தியுள்ள சம்பவம், தமது தகுதியை இவரே தரம் தாழ்த்தி கொண்டார் என்பதாகும் என்றார் அவர்.
எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி சனிக்கிழமை நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்களிப்பு நாள் வரை, நெகிரி செம்பிலான் மாநிலத்துக்கு சானுசி வரக்கூடாது என தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ ஸாஹிட் கூறியிருப்பது, தேர்தல் பிரச்சாரத்திற்கு இவர் தகுதியற்றவர் என்பது தான் பொருள் என அவர் சுட்டிக் காட்டினார்.
சானுசி தொடர்ந்து இனவாத பிரச்சாரத்தில் ஈடுபட்டால், தேசிய முன்னணியின் வெற்றி வாய்ப்பு பறிபோகும் என டத்தோஸ்ரீ ஸாஹிட் உணர்ந்து கொண்டார் என அவர் தெரிவித்தார்.
குறிப்பாக பாஸ் தலைவர் ஹாடி அவாங்,சானுசி உட்பட பெரும்பாலான பாஸ் கட்சியின் தலைவர்கள் இனவாதமாக தான் பேசி வருகின்றனர்.
ஆகையால் தேர்தல் காலங்களில் இந்திய மற்றும் சீன வாக்காளர்கள் இவர்கள் பிரதிநிதித்துவம் கட்சியை முற்றாக நிராகரிக்க வேண்டும் என அழகேசு கேட்டுக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular