
செப்பாங் நவ 1
சரவாக் மாநிலத்தில் தனது விஸ்தரிப்பை அதிகரிக்கும் வகையில் கோலாலம்பூர்-பிந்துலு நகருக்கு நேரடி விமான சேவையை முன்னணி விமான நிறுவனமான பாத்திக் ஏர் தொடங்கியது.
இன்று கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு பிந்துலு விமான நிலையம் வந்தடைந்த முதலாவது பாத்திக் ஏர் விமான பயணிகள் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். உற்சாகமாக வந்திறங்கிய பயணிகளை சரவாக் சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோ லீ கிம் சின், சரவாக் விமான போக்குவரத்து தொழில்நுட்ப இயக்குனர் சியோ யூவ் ஹூவா,தன்சோங் பாத்து சட்டமன்ற உறுப்பினர் ஜோனி பாங் லியோங் மிங்,பிந்துலு அதிகாரி டத்தோ நுராக் கெல்லி, சரவாக் சுற்றுலாத்துறை இயக்குனர் நூருல் அமின், மலேசிய விமான போக்குவரத்து எடிஎஸ் நிர்வாகி ஜோப்ரின் அனாக் சானி ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.
இதனிடையே இந்த புதிய விமான சேவை பாத்திக் ஏர் சராவாக்கில் விஸ்தரிக்கவும் மற்றும் சரவாக்கின் முக்கிய நகர்களின் வளர்ச்சிக்கும் உதவும் என பாத்திக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.

இந்த சுறுசுறுப்பான நகருக்கு இப்புதிய விமான சேவை, இந்நகரின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கிழக்கு மலேசியாவில் இன்னும் தனது விஸ்தரிப்பை பாத்திக் ஏர் அதிகரித்து வரும் என்றார் அவர்.
பிந்துலு மற்றும் இங்குள்ள இதர நகரங்களுக்கு சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது நாட்டின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவதாக அவர் சொன்னார்.

இதனிடையே கூச்சிங்கிலிருந்து சிங்கப்பூர் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு விமான சேவையை மேற்கொள்ள பாத்திக் ஏர் பரிசிலிக்க வேண்டும் என சரவாக் சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோ லீ கிம் சின் கேட்டுக்கொண்டார்.
கோலாலம்பூர்-பிந்துலு நகருக்கு பாத்திக் ஏர் வாரத்திற்கு 10 விமான சேவைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது இப்பிராந்திய வர்த்தக மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு நற்செய்தி என அவர் சொன்னார்.


