
கோலாலம்பூர் அக் 31
கடந்த 17 ஆண்டுகளாக சட்ட தொழில் வாரியம் தணிக்கை செய்யப்படவில்லை என பிரதமர் இலாக்கா ‘சட்டம் மற்றும் நீதி சார் சீர்திருத்தம்’ துணையமைச்சர் எம். குலசேகரன் கூறினார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் செலவின நடவடிக்கைகளுக்காக இந்த வாரியம் வெ 20.5 மில்லியன் செலவிட்டுள்ளதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் நேற்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
சட்டத் தொழில் சான்றிதழுக்கு பொறுப்பேற்றுள்ள இந்த வாரியம், கடந்த செப் 30 ஆம் தேதி வரை சிஎல்பி தேர்வு எழுதும் வேட்பாளர்களிடமிருந்து வெ 55.2 மில்லியன் வசூலித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சட்டத்துறை தலைவர் தலைமையிலான இந்த வாரியத்தின் கணக்குகள் 1984-1989 மற்றும் 1992-2006 மட்டுமே தணிக்கை செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
1976 ஆம் ஆண்டு சட்டத் தொழில் சட்டத்தின் கீழ் கண்காணிக்கப்பட்டு வரும் இந்த வாரியம், தனது ஆண்டறிக்கைகளை எந்த ஒரு அமைச்சரிடமோ சமர்ப்பிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றார் அவர்.
இந்த வாரியத்தின் ஆண்டறிக்கைகள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அமைச்சரவை கவனத்திற்கு விரைவில் கொண்டுவரப்படும் என அவர் குறிப்பிட்டார்.


