Tuesday, September 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பெல்டாவை வலுப்படுத்தி அதன் பிரச்சனைகளுக்கு மடானி அரசு தீர்வு காண்கிறது – யுனேஸ்வரன்

பெல்டா நிறுவனத்தைத் தொடர்ந்து வலுப்படுத்துவதுடன், அடுத்த தலைமுறையினரின் எதிர்காலத்திற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சரும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.

மடானி அரசாங்கம் பெல்டாவை முழுமையாக மீட்டெடுத்து, நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெல்டா குடியேற்றவாசி குடும்பங்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தெளிவான அரசியல் உறுதியைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

மடானி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, அதிகமான கடன் சுமை, நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளின் தாக்கம் காரணமாக பெல்டா பல்வேறு நிதி சவால்களை எதிர்கொண்டிருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

எனினும், இந்தப் பிரச்சனைகளை தொடர்ந்து நீடிக்க விடாமல், அவற்றுக்குத் தீர்வு காணும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெல்டா மீட்பு திட்டத்தின் கீழ், 2023-ஆம் ஆண்டு முதல் பெல்டாவின் நிதிப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக ஆண்டுதோறும் 990 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும், இதுவரை கிட்டத்தட்ட 3.96 பில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம், 1956-ஆம் ஆண்டு முதல் கிராமப்புற வளர்ச்சிக்குப் பங்களித்து வரும் பெல்டா நிறுவனம் தொடர்ந்து நிலைத்திருக்கவும், குடியேற்றவாசிகளின் நலன் பாதுகாக்கப்படவும், அதன் நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1 பில்லியன் ரிங்கிட்டை வழங்கி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிதியைப் பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள் அல்லது பிற பொது வசதிகளை அமைக்க பயன்படுத்தியிருக்கலாம் என்றாலும், கடந்த கால நிர்வாகத் தவறுகளுக்குப் பெல்டா குடியேற்றவாசிகள் பலியாகக் கூடாது என்ற நோக்கில் மடானி அரசாங்கம் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளதாக அவர் கூறினார்.

பெல்டாவின் மீட்பு நடவடிக்கை கடன் தீர்வுடன் மட்டும் முடிவடையக் கூடாது என்றும், அடுத்த கட்டமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை பெல்டா மக்களின் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இன்றைய நிலையில், பெல்டா இளைஞர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாக:

  • பெல்டா பகுதிகளில் மலிவு விலை வீடுகளுக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பது;
  • சொந்தமாக நிலம் பெற்று புதிய வாழ்க்கையை அமைப்பதில் உள்ள சிரமங்கள்;
  • தரமான வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பதால் இளைஞர்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர வேண்டிய நிலை;
  • தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி (திவேட்), தொழில்முனைவு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பயிற்சிகளின் தேவை

ஆகியவை உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், இவ்விவகாரம் தமக்கு மிகவும் நெருக்கமானது என்றும், சிகாமாட் தொகுதியிலும் பல பெல்டா குடியேற்றத் திட்டங்கள் பல ஆண்டுகளாக மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்து வருவதாகவும் அவர் கூறினார்.

சிகாமாட்டைச் சேர்ந்த பல பெல்டா இளைஞர்கள் கல்வி, திறன் மற்றும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையானது புதிய வாய்ப்புகள் மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.

பெல்டா பகுதிகளில் இரண்டாம் தலைமுறையினருக்கான வீடமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்துதல், குடியேற்றவாசிகளின் பிள்ளைகள் குடும்பத்திற்கு அருகில் வீடுகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் நில உரிமைக் கொள்கைகளை மேம்படுத்துதல், புதிய முதலீடுகள் மற்றும் தொழில்களை ஈர்த்து வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி, நவீன வேளாண்மை தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் பொருளாதாரப் பயிற்சிகளை விரிவுபடுத்துதல், உள்கட்டமைப்பு மற்றும் இணைய வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

பெல்டா என்பது ஓர் அரசு நிறுவனம் மட்டுமல்ல என்றும், வறுமையை ஒழித்து, கிராமப்புறப் பகுதிகளை மேம்படுத்தி, வெற்றிகரமான பூமிபுத்ரா நடுத்தர வர்க்கத்தை உருவாக்கிய ஒரு முக்கிய அடையாளம் என்றும் யுனேஸ்வரன் தெரிவித்தார்.

அரசியலைத் தாண்டி பெல்டாவை வலுப்படுத்தும் முயற்சி தொடர வேண்டும் என்றும், நிதிச் சுமையைத் தீர்க்கும் துணிச்சலான நடவடிக்கைகளை மடானி அரசாங்கம் ஆரம்பித்துள்ள நிலையில், அடுத்த தலைமுறைகளின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சிகாமாட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெல்டா மக்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் சம்பந்தப்பட்ட தரப்புகளிடமும் கொண்டு சென்று, பெல்டாவின் வளர்ச்சியைத் தேசிய முன்னுரிமைத் திட்டமாக முன்னெடுப்பேன் என்றும் யுனேஸ்வரன் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular