
மலேசிய இந்தியக் கலைஞர்கள் தங்களது திறமையை மேலும் வெளிப்படுத்தும் வகையில், ‘கலப்படம்’ எனும் பிரபலமான வானொலி இசை நிகழ்ச்சி ஜொகூர், கூலாயில் முன்னோடி நிகழ்ச்சியாக மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்முயற்சி, கலைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் 70-களில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கலப்படம்’, கலைஞர்கள், கலைச் சங்கங்களின் வேண்டுகோளுக்கிணங்க தொடர்ந்து மீண்டும் நடத்தப்படுவதாக தொடர்பு துணையமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.

“முன்னதாக இந்திய கலைஞர்களின் சங்கங்களைச் சந்தித்தபோது, இந்த நிகழ்ச்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற விருப்பத்தை அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். இது உள்ளூர் கலைஞர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்த சிறந்த மேடையாக அமையும்,” என கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, கூலாய் பேரங்காடி ஒன்றில் நடைபெற்ற ‘கலப்படம்’ இசை நிகழ்ச்சியில் தியோ கலந்து சிறப்பித்தார்.
‘கலப்படம்’ மூன்று இடங்களில் முன்னோடி திட்டங்களாக நடைபெறும் என தெரிவித்த அவர், அதன் முதல் பகுதியாக கூலாய் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற இரு இடங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
“மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தால், அடுத்தாண்டு இந்நிகழ்ச்சியை மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது,” என்றார்.

இதற்கிடையில், மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான ஃபினாஸ் சார்பில், ‘மடானி கலைஞர் நலத் திட்டம்’ மூலம் ஜொகூரைச் சேர்ந்த ஐந்து இந்திய கலைஞர்களுக்கு நிதியுதவியும் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
2023-இல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் இதுவரை 183 கலைஞர்கள் பயனடைந்துள்ளதுடன், மொத்தம் ரி.ம.144,900 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தியோ குறிப்பிட்டார். படைப்பாற்றல் துறையில் பங்களித்து வரும் கலைஞர்களின் நலனில் மடானி அரசாங்கம் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருவதற்கான மற்றொரு சான்றாக இது அமைந்துள்ளது.


