Friday, July 3, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கூலாயின் மூன்று தொகுதிகளிலும் பாரிசான் வெற்றி பெற வேண்டும்; மக்கள் சேவையே எங்கள் முதன்மை – ஒன் ஹாஃபிஸ்!

ஜோகூர் மாநில 16வது சட்டமன்றத் தேர்தலில் கூலாய் மாவட்டத்தின் புக்கிட் பத்து, புக்கிட் பெர்மாய், செனாய் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் பாரிசான் நேஷனல் வெற்றி பெற வேண்டும் என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹாஃபிஸ் காசி வலியுறுத்தினார்.

புக்கிட் பத்து தொகுதியில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தேர்தல் என்பது வெறும் அரசியல் போட்டி மட்டுமல்ல, மக்களுக்கான சேவையை தொடர்வதற்கான பொறுப்பு என்றும் கூறினார். கடந்த சில ஆண்டுகளில் ஜோகூர் மாநில அரசு அறிவித்ததை செயல்படுத்தி, மக்கள் நேரடியாக பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“தேர்தல் காலத்தில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்குவது எங்களின் அரசியல் கலாச்சாரம் அல்ல. மக்களுக்கு தேவையானதை அறிந்து, அதை செயல்படுத்தும் அரசாகவே பாரிசான் நேஷனல் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சொல்வதை செய்வோம்; செய்வதை மட்டுமே சொல்வோம்,” என்று அவர் கூறினார்.

மாநிலத்தில் மக்கள் வீட்டு வசதி திட்டங்களுக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், கடந்த சில ஆண்டுகளில் மில்லியன் கணக்கான ரிங்கிட் ஒதுக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பிபிஆர் வீட்டு அலகுகள் கட்டப்பட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வளர்ச்சி என்பது நகரங்களை மட்டுமல்ல, சாதாரண மக்களின் வாழ்க்கையையும் உயர்த்த வேண்டிய ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

சாலைகள் சேதமடைதல், அடிப்படை வசதிகள், உள்ளூர் உட்கட்டமைப்பு உள்ளிட்ட மக்கள் முன்வைக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் மாநில அரசு தொடர்ந்து தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு தேவைப்படும் திட்டங்களுக்காகவும் இடையறாத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இதனிடையே, 20 ஆண்டுகளாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக பணியாற்றிய அனுபவம் தனக்கு மக்களின் தேவைகளை நேரடியாக அறிந்து செயல்பட உதவியுள்ளதாக புக்கிட் பத்து பாரிசான் நேஷனல் வேட்பாளர் ஆர். குமரன் கூறினார். தேர்தலில் வெற்றி பெற்றால், ஒவ்வொரு குடியிருப்பாளரின் குரலையும் சட்டமன்றத்தில் ஒலிக்கச் செய்வேன் என்றும், எந்த நேரத்திலும் மக்களை அணுகக்கூடிய பிரதிநிதியாக இருப்பேன் என்றும் உறுதியளித்தார்.

கூலாய் மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் பாரிசான் நேஷனல் வேட்பாளர்களுக்கு மக்கள் சிறப்பான ஆதரவை வழங்கி வருவதாகவும், அந்த ஆதரவு தேர்தல் வெற்றியாக மாறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் புக்கிட் பெர்மாய் வேட்பாளர் டத்தோ ஜஃபினி ஷுகோர் தெரிவித்தார்.

தேர்தல் பணியாளர்களை நோக்கி உரையாற்றிய ஒன் ஹாஃபிஸ், இளைஞர் வாக்காளர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். சமூக வலைத்தளங்களில் பரவும் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதில் நேரத்தை வீணடிக்காமல், மக்களிடம் சென்று அரசின் சாதனைகளையும் எதிர்கால திட்டங்களையும் எடுத்துரைப்பதே முக்கியம் என்றார்.

“என்னைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அகந்தையுடன் இருப்பதாகவும், சிறு பையன் என்பதால் அனுபவமற்றவன் என்றும் கூறினர். ஆனால் அவை எதுவும் எங்கள் தொண்டர்களின் மனஉறுதியை சிதைக்கவில்லை. மக்களுக்காக தொடர்ந்து உழைப்பதே எங்கள் பதிலாக இருக்கும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

புக்கிட் பத்து, புக்கிட் பெர்மாய், செனாய் ஆகிய மூன்று தொகுதிகளின் தேர்தல் இயந்திரங்களும் ஒருங்கிணைந்து முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து பாரிசான் நேஷனலின் சேவைகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் எடுத்துரைத்து மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் ஒன் ஹாஃபிஸ் கேட்டுக்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular