Tuesday, August 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சீர்திருத்தங்கள் பூர்த்தியடைய அன்வாருக்கு மீண்டும் வாய்ப்பளிப்பீர்: பிகேஆர் மாநாட்டில் ரமணன் வலியுறுத்தல்!

கூட்டரசு அரசாங்கம் தனது சீர்திருத்த திட்டங்களை முழுமையாக நிறைவு செய்வதற்கு ஏதுவாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரண்டாவது முறையும் பிரதமராக தொடர மக்கள் நீதி கட்சி (பிகேஆர்) உறுப்பினர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அதன் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைகளும் சீர்திருத்த முயற்சிகளும் மக்களுக்குத் தெளிவான நன்மைகளைத் தருவதை உறுதி செய்வதற்குப் கட்சிக்குள்ளான ஒற்றுமை மிக முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2026 பிகேஆர் தேசிய காங்கிரஸின் நிறைவு உரையின் போது பேசிய அவர், கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒரே அணியாகச் செயல்பட வேண்டும் என்றும், கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் அரசாங்கத்தின் நற்பலன்களை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறினார்.

இந்த மாநாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் அனைவரும் ஒரே உறுதியை எடுக்க வேண்டும் என்றும், பிரதமர் அன்வார் மேலும் ஒரு தவணைக்கு பிரதமராக நீடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அப்போதுதான் தங்களது போராட்டமும் சீர்திருத்தப் பணிகளும் முழுமை பெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கட்சியின் பலம் தனிநபர்களையோ அல்லது குழுக்களையோ சார்ந்தது அல்ல மாறாக கூட்டு ஒற்றுமையையே சார்ந்துள்ளது என்று ரமணன் வலியுறுத்தினார். மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், உட்கட்சி மோதல்கள் கிளைக் குழுக்களைச் சீர்குலைத்து, தொண்டர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, இறுதியாக அரசியல் எதிரிகளுக்கே சாதகமாக அமைந்துவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

கட்சி ஒற்றுமையைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அதே வேளையில், உட்கட்சி ஒற்றுமை என்பது ஆரோக்கியமான விமர்சனங்களைத் தடுக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கட்சியையும் தலைவரையும் பாதுகாப்பது என்பது விமர்சிக்க முடியாது என்று அர்த்தமல்ல என்றும், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ரமணன் கேட்டுக்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular