Monday, August 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் – கோலாலம்பூர்.

கோலாலம்பூர், ஆக 17

மலேசியாவிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரகம், இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை 15 ஆகஸ்ட் 2026 அன்று கோலாலம்பூரில் உள்ள இந்தியா ஹவுஸில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியது.
இந்தக் கொண்டாட்டத்தில் மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், இந்தியப் பிரஜைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 1,800 பேர் கலந்துகொண்டனர். இது இதுவரை நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் அதிகளவிலான பங்கேற்பாகப் பதிவாகியுள்ளது.
இந்த சிறப்பு நாளில், ‘சூர்யபாத் திரங்கா’ முயற்சியிலும் இந்திய உயர் ஸ்தானிகரகம் இணைந்தது. ‘ஹர் கர் திரங்கா’ பிரசாரத்தின் கீழ், சூரிய உதயத்தைப் பின்தொடர்ந்து கிழக்கிலிருந்து மேற்காக உலகம் முழுவதும் உள்ள 54 இந்திய தூதரகங்களில் தேசியக் கொடியேற்றம் நடைபெற்ற உலகளாவிய தொடர் நிகழ்வாக இது அமைந்தது.
விழாவின் உத்தியோகபூர்வ நிகழ்வுகள், ‘வந்தே மாதரம்’ பாடலின் உணர்வுபூர்வமான பாடலுடன் ஆரம்பமானது. வந்தே மாதரம் பாடல் தொடங்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அனைவரும் இதில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மலேசியாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகரகத்தின் பொறுப்புத் தூதர் ஹிதேஷ் ராஜ்பால் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய பொறுப்புத் தூதர், இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகளை வாசித்தார்.
சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியா கடந்து வந்த பயணத்தை அவர் நினைவுகூர்ந்ததுடன், 2047ஆம் ஆண்டுக்குள் ‘விக்சித் பாரத்’ – வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தேசிய இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியா–மலேசியா உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். 2026 பிப்ரவரியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, குறைக்கடத்திகள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மற்றும் ஃபின்டெக், பேரிடர் மேலாண்மை, இந்தியத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியா, ஆசியான் அமைப்பில் இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய வர்த்தகப் பங்குதாரராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பும் தொடர்ந்து வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த வாரம் நடைபெற்ற ‘உதார சக்தி’ கூட்டு இராணுவப் பயிற்சியில் இந்திய ரஃபேல் போர் விமானங்கள் மலேசிய விமானப்படை விமானங்களுடன் இணைந்து செயல்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.
மலேசியாவில் வசிக்கும் சுமார் 27.5 லட்சம் இந்திய வம்சாவளியினருக்கு இந்திய அரசின் சார்பில் அன்பான வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் அனைவரும் 2047ஆம் ஆண்டுக்குள் ‘விக்சித் பாரத்’ என்ற தேசிய இலக்கை அடைவதற்கு தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கலாசார நிகழ்ச்சிகள்
விழாவில் பல்வேறு கண்கவர் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
கல்பனா டான்ஸ் தியேட்டரின் ரித்திமா ராஜ்பால் ‘தேவி வந்தனம்’ என்ற பரதநாட்டிய நிகழ்ச்சியை வழங்கினார்.
பாரத் கிளப்பின் மகளிர் பிரிவு தேசபக்திப் பாடல்களின் தொகுப்பை வழங்கியது. Sprout Academy, Vikas International School மற்றும் Global Indian International School (GIIS) மாணவர்கள் நடன நிகழ்ச்சிகளை வழங்கினர்.
மேலும், தெலங்கானாவின் பாரம்பரிய நாட்டுப்புற நடனமான மதுரி பழங்குடியினர் நடனம், Malaysia Telangana Association (MYTA) சார்பில் இடம்பெற்றது.
Marwari Yuva Manch (MYM) மகளிர் பிரிவு மற்றும் குழந்தைகள் இணைந்து கத்புத்லி நடனத்தை வழங்கினர்.
விழாவின் கலாசார நிகழ்ச்சிகள், 2025ஆம் ஆண்டுக்கான ICCR-ன் Pratibha Sangam போட்டியில் வெற்றி பெற்ற கௌதமன் மணி வழங்கிய ‘நடேச கவுத்துவம்’ என்ற சிறப்பான பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
விருதுகள் மற்றும் கௌரவிப்பு
விழாவின் ஒரு பகுதியாக கௌரவிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
2025ஆம் ஆண்டு Pratibha Sangam போட்டியில் முதலிடத்தைப் பெற்ற கௌதமன் மணி, 3 முதல் 14 ஆகஸ்ட் 2026 வரை நடைபெற்ற சிறப்பு சுதந்திர தின ‘Bharat Ko Janiye’ வினாடி வினா போட்டியில் மலேசியாவிலிருந்து சிறப்பாகச் செயல்பட்டவர்கள், மலேசியாவில் நடைபெற்ற ‘India Through My Lens’ புகைப்படப் போட்டியின் வெற்றியாளர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், Sprout Academy, Global Indian International School மற்றும் Vikas International School மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
‘ஹர் கர் திரங்கா’ பிரசாரம்
9 முதல் 17 ஆகஸ்ட் 2026 வரை நடைபெறும் ‘ஹர் கர் திரங்கா’ பிரசாரத்தின் 5ஆவது பதிப்பின் தொடர்ச்சியாகவும் இந்தக் கொண்டாட்டம் அமைந்தது.
இந்தியர்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி, திரங்காவுடனான தனிப்பட்ட உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதே இந்தப் பிரசாரத்தின் நோக்கமாகும்.
இதற்காக இந்தியா ஹவுஸில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ‘ஹர் கர் திரங்கா’ செல்ஃபி பூத்கள் அமைக்கப்பட்டிருந்தன. பார்வையாளர்கள் தேசியக் கொடியுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அவற்றை சமூக ஊடகங்களில் பகிரும் வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
‘Project Tiranga’ – கின்னஸ் உலக சாதனை
விழாவின் சிறப்பு தருணமாக, ‘Project Tiranga’ கின்னஸ் உலக சாதனையில் மலேசியாவிலிருந்து பங்கேற்றவர்கள், கைத்தறி முறையில் தயாரிக்கப்பட்ட சிறப்பு கம்பளி திரிவர்ணக் கொடியை இந்திய உயர் ஸ்தானிகரகத்தின் பொறுப்புத் தூதரிடம் வழங்கினர்.
Mahila Manovikas முன்னெடுத்த ‘Project Tiranga’, உலகின் மிக நீளமான குரோஷே முறையில் தயாரிக்கப்பட்ட திரங்கா கொடி அலங்காரச் சங்கிலிக்கான கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.
கடந்த 7 ஆகஸ்ட் 2026 அன்று விசாகப்பட்டினத்தில், 12.18 கிலோமீட்டர் நீளமுடைய இந்த குரோஷே திரங்கா சங்கிலி உலக சாதனையாகப் பதிவு செய்யப்பட்டது.
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மலேசியாவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளில் கலந்து கொண்டு கொண்டாட்டத்தை சிறப்பித்த அனைவருக்கும் இந்திய உயர் ஸ்தானிகரகம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular