
செங்காங், கூலாய் ஆக 17
கூலாய், செங்காங்கில் உள்ள மக்கள் சிறந்த வசதிகளுடன் கூடிய புதிய ஆலயத்தைப் பெற வேண்டும் என்ற நீண்டநாள் கனவு தற்போது நனவாகும் பாதையில் உள்ளது. தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் புதிய கட்டுமானப் பணிகள் தற்போது முன்னேற்றம் கண்டு வருகின்றன.
ஆலயத்தின் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தை நேரில் பார்வையிட்ட கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங், ஆலயம் என்பது வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, அது சமூகத்தின் அடையாளம், பாரம்பரியம் மற்றும் வாழ்வியலின் ஒரு பகுதியாகும் என தெரிவித்தார்.
“ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து முன்னேறி வருவதைக் காணும்போது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது சமூகத்தின் நீண்டநாள் கனவு. அந்தக் கனவு நனவாகுவதற்கு எங்களால் முடிந்த ஆதரவை வழங்கி வருகிறோம்,” என்றார்.
மேலும் பேசிய அவர், தனது தொடர் ஆதரவின் ஒரு பகுதியாக, கூலாய் நாடாளுமன்ற மக்கள் சேவை மையம், 2023 முதல் இவ்வாண்டு வரை மொத்தம் இதுவரை ரி.ம.18,000 இந்த ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தர். ஆலயத்தின் தேவைகள் மற்றும் தொடர்புடைய பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, புதிய ஆலயத்தின் கட்டுமானத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சின், இந்து அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான பராமரிப்பு முயற்சியினான ரிபி திட்டத்தின் கீழ் ரி.ம.248,560 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடர்பு துணையமைச்சுருமான தியோ, முன்னதாக இந்த நிதிக்கான மாதிரி காசோலைகளை ஆலய நிர்வாகத்திடம் எடுத்து வழங்கினார். ஆலயக் கட்டுமானப் பணிகளுக்கான அரசாங்கத்தின் ஆதரவை வெளிப்படுத்தினார்.
“ரி.ம.248,560 நிதி செங்காங் சமூகத்திற்கு நிச்சயமாக ஒரு நல்ல செய்தி. இது கட்டுமானச் செலவின் சுமையைக் குறைத்து, பணிகள் மேலும் சுமுகமாகவும் விரைவாகவும் முன்னெடுக்க உதவும். இந்த ஆலயம் முழுமையாக நிறைவடைந்து, வரும் ஆண்டுகளில் சமூக மக்களுக்கு பயனளிக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு,” என்றார்.
அவரின் வருகையின் போது, செங்காங் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 குடும்ப பிரதிநிதிகளுக்கு உணவுப் பொருள் கூடைகளும் வழங்கப்பட்டன.



