Tuesday, June 30, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ் இலக்கணமும் இலக்கியமும் பண்புமிக்க தலைமுறையை உருவாக்கும் – யுனேஸ்வரன்

தமிழ் மொழி வெறும் தொடர்பாடல் கருவி மட்டுமல்ல; அஃது பாரம்பரியம், அடையாளம் மற்றும் நாகரிகத்தின் அடையாளமாக விளங்குவதால், அதை பாதுகாத்து எதிர்காலத் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது அனைவரின் பொறுப்பாகும் எனத் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.

அண்மையில் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி கழகம் ஏற்பாடு செய்த ‘அறிவுச்சுடராழி’ அனைத்துலகத் தமிழ் இலக்கண இலக்கிய புதிர்ப் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வாறான நிகழ்ச்சிகள் இளம் தலைமுறையினரிடையே தமிழ் இலக்கணம் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், தாய்மொழியில் புலமை பெறுவது ஒருவரின் அடையாளத்தை வலுப்படுத்துவதோடு, மொழியின் வரலாறு, பண்பாடு மற்றும் உயரிய விழுமியங்களை மதிக்கும் தலைமுறையை உருவாக்குவதாகவும் அவர் கூறினார்.

இந்த அர்த்தமிக்க முயற்சியை முன்னெடுத்த ஏற்பாட்டாளர்களுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்த அவர், ‘அறிவுச்சுடராழி’ நிகழ்ச்சி தமிழ் மொழியின் மீதான பற்றை மேலும் வளர்க்கும் தளமாகத் தொடர்ந்து விளங்க வேண்டும் என்றும், அறிவும் தன்னம்பிக்கையும் கொண்ட, தமது பாரம்பரியத்தைப் போற்றும் தலைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தாய்மொழியை உயர்த்திப் பேணுவது நமது அடையாளத்தைப் பாதுகாப்பதுடன், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி, சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular