
கோலாலம்பூர் ஆக 13
தற்போது திடீரென முடக்கப்பட்ட 10 ஆண்டுகளுக்கான கடப்பிதழ் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது யார் என பாக்காத்தான் ஹராப்பான் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கேள்வி எழுப்பினார்.
இந்த கடப்பிதழ் திட்டத்தை யார் பரிந்துரை செய்தது? மற்றும் முறையாக சோதனை செய்யப்பட்டதா? என்பது குறித்து சுயேட்சை கணக்காய்வு நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நடப்பில் உள்ள கடப்பிதழுக்கு பதிலாக இந்த புதிய கடப்பிதழ் திட்டத்துக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற தகவலை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றார் அவர்.
காரணம் இந்த புதிய கடப்பிதழ் திட்டத்தினால் வெளிநாட்டில் உள்ள மலேசியர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 38,000 கடப்பிதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன என குடி நுழைவு இலாக்கா அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த புதிய திட்டத்தை பரிந்துரை செய்தது யார் மற்றும் இதற்கான செலவு தொகை குறித்து உண்மை நிலவரத்தை வெளிப்படுத்த உள்துறை அமைச்சு ஒரு சிறப்பு கணக்காய்வை நடத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தை சோதனை செய்ய மக்களை பணயம் வைக்கக்கூடாது என அவர் சாடினார்.
வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் இந்த கடப்பிதழால் பெரும் சிரமத்தை எதிர் நோக்கி வருவதாக அவர் சொன்னார்.
இந்த பிரச்சனைக்கு உள்துறை அமைச்சர் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.



