
மஇகாவிற்கு எதிராக அவதூறு பிரச்சாரங்களை பரப்பி வரும் நபர்களுக்கு எதிராக விரைவில் சட்டம் பாயும் என கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் சிவசுப்பிரமணியம் எச்சரித்தார்.
விரைவில் நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சில தரப்பினர் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக ஜொகூர் மாநில மஇகா கட்டிடம் விற்கப்பட்டு விட்டதாகவும், தற்போது ஒரு பழமை வாய்ந்த மோசமான நிலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் மாநில மஇகா செயல்பட்டு வருவதாகவும் சமூக ஊடகங்களில் பொய் பிரச்சாரத்தை குறிப்பிட்ட தரப்பினர் பரப்பி வருவதாக அவர் சொன்னார்.
உண்மை நிலை என்ன என்பதை தெரியாமல் பொறுப்பற்ற தனமாக இந்த தரப்பினர் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மாநில மஇகா தலைமையகம் தம்போய் நகரில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
ஆகையால் சமூக வலைத்தளத்தில் கட்சிக்கு எதிராக பொய் பிரச்சாரத்தை பரப்பி வரும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த கீழறுப்பு நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார்.
இதனிடையே எதிர்வரும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் கட்சி 4 தொகுதிகளில் போட்டியிடவிருப்பதாக அவர் சொன்னார்.
கெமெலா, புக்கிட் பாத்து,காஹாங்,
பெர்லிங் ஆகிய தொகுதிகளில் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்றார் அவர்.
தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும், மஇகாவிற்கு, நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக அவர் சொன்னார்.
இந்த தேர்தலில் சுமார் 80 விழுக்காடு இந்திய வாக்காளர்களின் ஆதரவு மஇகாவிற்கு கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


