
செப்பாங் ஜூன் 9
ஏர் ஏசியா குழுமத்தின் நீண்ட தூர விமான சேவை நிறுவனமான AirAsia X, மலேசிய ஆலோசகர்கள் வாரியத்துடன் (Board of Counsellors Malaysia – BOC) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOA) கையெழுத்திட்டுள்ளது. அவசரநிலைத் தயார்நிலை, உளவியல் மற்றும் சமூக ஆதரவு திறன்கள், பாதுகாப்பு மற்றும் நெருக்கடி மேலாண்மை அமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்த கையெழுத்து நிகழ்வை மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் மற்றும் ஏர் ஏசியா குழுமத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி கேப்டன் சுரேஷ் பங்கா ஆகியோர் சாட்சியமாகக் கண்டனர். இந்த ஒத்துழைப்பின் மூலம், அவசரநிலை அல்லது பேரிடர் சூழ்நிலைகளில் பாதிக்கப்படும் பயணிகள், பணியாளர்கள், உயிர் தப்பியவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தொழில்முறை உளவியல் ஆலோசனை மற்றும் மனநல ஆதரவு வழங்கப்படும்.
ஒப்பந்தத்தின் கீழ், அவசரநிலைத் தயார்நிலை, பேரிடர் மீட்பு நடவடிக்கைகள், உளவியல் முதலுதவி (Psychological First Aid), அவசரகால பயிற்சிகள் மற்றும் ஏர் ஏசியா பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி திட்டங்கள் ஆகிய துறைகளில் இரு தரப்பினரும் இணைந்து செயல்பட உள்ளனர். அதோடு, நெருக்கடி சூழ்நிலைகளில் பதிவு செய்யப்பட்ட ஆலோசகர்களை களமிறக்கி உதவி வழங்கும் ஏற்பாடுகளும் செய்யப்படும்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கேப்டன் சுரேஷ் பங்கா, “பயணிகளின் பாதுகாப்பும் நலனும் எப்போதும் எங்களின் முதன்மை முன்னுரிமையாகும். இந்த ஒத்துழைப்பு மூலம் செயல்திறன் மட்டுமல்லாது, மனிதநேய அடிப்படையிலான உளவியல் ஆதரவு சேவைகளையும் வலுப்படுத்துகிறோம். அவசரநிலைகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு விரைவான உதவி மற்றும் ஆறுதலை வழங்கும் எங்கள் திறன் இதன் மூலம் மேலும் மேம்படும்,” என்றார். அதேவேளை, மலேசிய ஆலோசகர்கள் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹாஜி சாட்லி ஒஸ்மான், விமானத் துறையில் மனநல மற்றும் உளவியல் ஆதரவு சேவைகளை வலுப்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் முக்கிய மைல்கல்லாக அமையும் என்று தெரிவித்தார்.


