
கூலாய் – மூன்று இந்திய தொழில்முனைவோருக்கு தெக்கூன் நேஷனலின் இந்திய சமூக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டமான (ஸ்பூமி) கீழ் மொத்தம் ரி.ம.100,000 வரையிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கடனுதவிக்கான ஒப்புதல் கடிதங்களை, கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் அன்மையில் எடுத்து வழங்கினார். முன்னதாக, அம்மூவரையும் நேரில் சென்று சந்தித்து மாதிரி காசோலைகள எடுத்து வழங்கிய அவர், ஸ்பூமி போன்ற அரசாங்க திட்டங்கள் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள இந்தியர்களுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்காமல் இருப்பதை உறுதி செய்யும் மடானி அரசாங்கத்தின் தொடர் முயற்சியை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.

“அரசாங்கம் கடனுதவி மட்டும் வழங்குவதில்லை. மாறாக, தொழில்முனைவோர்கள் தங்களின் வியாபரத்தை விரிவுபடுத்தவும், குடும்ப வருமானத்தை உயர்த்தவும், உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஆர்வம் கொடுக்கின்றது,” என அவர் தெரிவித்தார்.
மூன்று தொழில்முனைவர்களான ரமேஸ் ரங்கா சங்கா @ ராமு (ரி.ம.50,000), மாரியம்மாள் சந்திரசேகரன் (ரி.ம40,000) மற்றும் கலைச் செல்வி சுப்பையா (ரி.ம.10,000) ஆகியோர் இந்த கடனுதவியைப் பெற்றனர்.
ஸ்பூமி திட்டத்திற்கான ஒதுக்கீடு ரி.ம.50 மில்லியனாக உயர்த்தப்பட்டிருப்பதால், நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்முனைவோர்கள் தங்களின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான கடனுதவியைப் பெற முடியும் என்று தொடர்பு துணையமைச்சருமான தியோ நீ சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் தேக்கூன் நேஷனல், தகுதியுடைய தொழில்முனைவோருக்கு ரி.ம 1,000 முதல் ரி.ம.100,000 வரை நிதியுதவியை வழங்குகிறது.
தகுதி பெற்ற பல தொழில்முனைவோர்கள் அரசாங்கம் வழங்கும் இந்த நிதியுதவி வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களின் வணிக போட்டித்திறனை மேம்படுத்துவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்க வேண்டும் என தியோ வலியுறுத்தினார்.


