
உள்ளூர் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்குச் சிந்தனையைத் தூண்டும் கதை அம்சம் முக்கிய பங்காற்றுகிறது என்று தேசிய ஒருமைப்பாட்டுத் துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கூறினார்.
அண்மையில் பைட் ஆர் ப்ளைட் ( (Fight or Flight) குறும்படத்தின் சிறப்பு காட்சி திரையிடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், உள்ளூர் திரைப்படக் கலைஞர்களின் படைப்பாற்றல், திறமை மற்றும் கதை சொல்லும் திறனை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாக கூறினார்.
அந்நிகழ்ச்சியில் சிந்தனையைத் தூண்டும் குறும்படங்கள், சமூக விழிப்புணர்வு, மனித உணர்வுகள் மற்றும் நிதர்சன வாழ்க்கை கதைகளை வெளிப்படுத்தும் படைப்புகள் முன்னிறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

இத்தகைய தளங்கள் இளைஞர் திறமைகளை வளர்க்கவும், நாட்டின் கலை துறையை வலுப்படுத்தவும், சமூகத்தில் புரிதல், கருணை மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தவும் முக்கிய பங்காற்றுகின்றன என்று அவர் வலியுறுத்தினார்.
அதே வேளையில், இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் அவர் பாராட்டைத் தெரிவித்தார்.
உள்ளூர் திரைப்படத் துறைக்குப் பெரிய வளர்ச்சி வாய்ப்பு இருப்பதாகவும், சமூகத்தின் உண்மை நிலை, மதிப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கும் படைப்புகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மனிதாபிமானமும் சமூக நிதர்சனங்களும் அடிப்படையாகக் கொண்ட படைப்புகள், மக்களிடையே புரிதலை மேம்படுத்தவும், ஒற்றுமையான சமூகத்தை உருவாக்கவும் பாலமாக அமையும் என அவர் தெரிவித்தார்.


