Friday, June 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழ் அறிவு மரபின் பெருமையைப் பறைசாற்றுகிறது

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழ் அறிவு மரபின் பெருமையையும் மலேசியா – தமிழ்நாடு இடையேயான பண்பாட்டு உறவுகளின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தும் சிறப்புமிக்க இடமாகத் திகழ்கிறது என்று தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கூறினார்.

சென்னைக்கான பணிப்பயணத்தின் போது, கொட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்தார்.

தமிழ்நாடு அரசின் நவீன பொதுநூலகங்களில் ஒன்றாக விளங்கும் இந்நூலகம், சென்னை நகரின் முக்கிய அறிவுச் சின்னங்களுள் ஒன்றாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மலேசிய தேசிய நூலகத்தைப் போலவே இந்நூலகமும் அரசின் கீழ் இயங்கி வருவதால், இந்த வருகை வெறும் மரியாதை நிமித்தமான ஒன்றாக இல்லாமல், கருத்துப் பரிமாற்றம் மற்றும் அறிவுப் பகிர்வுக்கான வாய்ப்பாக அமைந்ததாக அவர் கூறினார்.

குறிப்பாக மலேசியா மற்றும் இந்தியாவின் தமிழ் சமூகங்களுக்கிடையேயான பண்பாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இத்தகைய சந்திப்புகள் முக்கிய பங்காற்றுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இலட்சக்கணக்கான நூல்கள், வாசிப்பு வசதிகள், மின்னணு வளங்கள், அரங்கங்கள் மற்றும் சமூக நிகழ்வுகளுக்கான இடங்கள் உள்ளதோடு, ஓலைச்சுவடிகள் மூலம் தமிழர் அறிவு மரபின் மகத்துவமும் பாதுகாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

பனை ஓலைகளில் அறிவைப் பதிவு செய்து பாதுகாத்த மரபு, பண்டைய தமிழர் சமூகத்தின் உயர்ந்த அறிவாற்றலையும் நாகரிக வளர்ச்சியையும் வெளிப்படுத்துவதாக அவர் கூறினார். இலக்கியம், மருத்துவம், வானியல், தத்துவம், சமயம், கட்டிடக்கலை மற்றும் வரலாறு உள்ளிட்ட பல துறைகளின் அறிவு தலைமுறைகள் கடந்து பாதுகாக்கப்பட்டு இன்று வரை கிடைத்திருப்பது தமிழர் பாரம்பரியத்தின் சிறப்பை எடுத்துக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நூலகம் என்பது புத்தகங்களைச் சேமிக்கும் இடம் மட்டுமல்ல; அது அறிவின் இல்லமாகவும், ஓர் இனத்தின் நினைவுகளைப் பாதுகாக்கும் பொக்கிஷமாகவும், கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் பண்பாட்டு பாலமாகவும் திகழ்கிறது என்று அவர் கூறினார்.

மலேசியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான அறிவு, பண்பாடு மற்றும் வரலாற்று உறவுகள் மேலும் வலுப்பெற்று, இரு நாடுகளின் மக்களுக்கும் பயனளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular