
எடிசன் விருது விழா போன்ற சர்வதேச விழாக்கள் கலை மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய தளமாகச் செயல்படுகின்றன எனத் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்துள்ளார்.
மலேசியா மற்றும் தமிழ்நாடு இடையிலான திரைப்படத் துறைகளில் புதிய ஒத்துழைப்புகளுக்கு இந்தத் தளம் வழிவகுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், மலேசியா மற்றும் தமிழ்நாடு இடையிலான உறவு வரலாறு, மொழி மற்றும் பண்பாட்டு மரபுகளால் மட்டுமல்லாமல், படைப்பாற்றல் மற்றும் கலை பரிமாற்றங்களின் மூலமும் வலுப்பெறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, 2025-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான 18-ஆவது எடிசன் விருதுகள் 2026 விழா மே 24-ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

இதில் துணையமைச்சர் சிறப்பு பிரமுகராகவும் விருது வழங்குநராகவும் கலந்து கொண்டார்.
மலேசியா – தமிழ்நாடு இடையிலான கலை கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கமாகத் துணையமைச்சரின் பங்கேற்பு அமைந்தது.
மேலும், விழா ஏற்பாட்டாளர்கள் செல்வகுமார் மற்றும் குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்ததுடன் திறமையானவர்களை அங்கீகரிக்கும் அவர்களின் முயற்சியைப் பாராட்டினார்.
மலேசியாவின் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் 2026ஆம் ஆண்டுக்கான எடிசன் விருதுகளுக்கு ஆதரவு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. இது மலேசியாவின் கலை மற்றும் கலாச்சார துறையின் சர்வதேச வெளிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் ஒரு நேர்மறையான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.


