
சவாலான உலக பொருளாதார சூழ்நிலைகள் நிலவி வந்த போதிலும், ஏர் ஆசியா குழுமம் வலுவான அடிப்படை செயல் திறனை வெளிப்படுத்தியுள்ளது.
ஏர் ஆசியா எக்ஸ்
(Air Asia X) தனது 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான
(1Q26) தணிக்கையிடப்படாத நீதி அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.
இது ஏர் ஆசியா விமான சேவைகள் அனைத்தும் ஒரே ஒருங்கிணைத்த தளத்தின் கீழ் இணைக்கப்பட்ட பிறகு வெளியாகும் முதல் முழுமையான காலாண்டு அறிக்கையாகும்.
2026 முதல் காலாண்டில், குழுமம் வெ1.009 பில்லியன் EBITDA மற்றும் வெ199 மில்லியன் நிகர செயல்பாட்டு லாபத்தை பதிவு செய்துள்ளது.
இதன் மூலம் EBITDA விகிதம் 17 சதவிகிதமாகவும், நிகர செயல்பாட்டு லாப விகிதம் 3 சதவிகிதமாகவும் இருந்தது.
மார்ச் மாதத்தில் மீட்கப்படாத எரிபொருள் செலவினால் லாப விகிதம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், காலாண்டின் முதல் இரண்டு மாதங்களில் லாப விகிதம் சுமார் 9 சதவிகிதத்தை எட்டியிருந்தது.
இது குழுமத்தின் வலுவான வருமானத் திறனை வெளிப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த காலாண்டில் மொத்தம் 18.9 மில்லியன் பயணிகள் ஏர் ஆசியா சேவைகளை பயன்படுத்தியுள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட 9 சதவிகிதம் அதிகரிப்பாகும். அதே சமயத்தில், நிறுவனத்தில் பயணிகள் கொள்ளளவு 10 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருந்த போதிலும், 85 சதவிகிதம் சராசரி இருக்கை நிரப்புதல் விகிதம் பராமரிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாத இறுதியில் உலக சந்தையில் ஜெட் எரிபொருள் விலை பேரலுக்கு 200 அமெரிக்க டாலரை தாண்டியுள்ளதால், மலேசியாவில் கூடுதலாக வெ200 மில்லியன் எரிபொருள் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே 2026 ஆம் ஆண்டை வலுவான தொடக்கத்துடன் ஆரம்பித்திருந்தாலும், ஜெட் எரிபொருள் விலை உயர்வு மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் சவாலாக மாறியுள்ளதாக ஏர் ஆசியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஃபோ லிங்கம் கூறினார்.
மேலும் இரண்டாம் காலாண்டில் 21 விமான வழிதடங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விமான கொள்ளளவு 10 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதே வேளையில் நிறுவனம் தனது நிதி நிலையை வலுப்படுத்தும் நோக்கில் 300 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை வெற்றிகரமாக பெற்றுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் பணப்புழக்க மேலாண்மைக்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி ஏப்ரல் மாதத்தில் முதல் A321LR விமானம் கிடைத்துள்ளதுடன், 150 A220 விமானங்களுக்கான வரலாற்றுச் சாதனை ஆர்டரும் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய அடித்தளமாக அமையமென அவர் குறிப்பிட்டார்.


